Home Featured நாடு ஹைலேண்ட் டவர் ‘அதிசயக் குழந்தை’ : 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு!

ஹைலேண்ட் டவர் ‘அதிசயக் குழந்தை’ : 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு!

785
0
SHARE
Ad

Nur-Hamidah1கோலாலம்பூர் – 23 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஹைலேண்ட் டவர் துயரச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நூர் ஹமிடா நாட்ஜிப் (இப்போது வயது 24) தன்னைக் காப்பாற்றிய மீட்புக்குழுவினரை நேற்று சந்தித்துத் தனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தன்னைக் காப்பாற்றிய கூட்டரசு குற்றப்புலனாய்வு இயக்குநர் டான்ஸ்ரீ சாமான் கான் ராஹிம் கான் மற்றும் குழுவினரின் கைகளைப் பற்றி முத்தமிட்டு கண்ணீருடன் தனது நன்றியைத் தெரிவித்தார் நூர் ஹமிடா.

23 வருடங்களுக்குப் பிறகு இந்த சிறப்பு ஒன்றுகூடல் சந்திப்பை டிவி9 ஏற்பாடு செய்தது. இந்தோனிசியாவில் இருந்து நூர் ஹமிடாவுடன் அவரது தாய் உமி ராசியிடா கோய்ருமானும் வந்திருந்தார்.

#TamilSchoolmychoice

அவரும் இந்தச் சம்பவத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர் தான். ஹைலேண்ட் டவர் சரிந்த சமயத்தில் அவர் அங்கு ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தார். அப்போது அவரது மகள் நூர் ஹமிடா 14 மாத கைக்குழந்தை.

இருவரும் இந்தச் சம்பவத்தில் உயிர் தப்பிய பின்னர் சொந்த நாடான இந்தோனிசியாவிற்கே சென்றுவிட்டனர். அதன் பின்னர் 23 ஆண்டுகள் கழித்து இப்போது தான் மலேசியா வருகின்றனர்.

இது குறித்து நூர் ஹமிடா பேசுகையில், “அப்போது நான் 14 மாதக் குழந்தை என்பதால் என்னால் பலவற்றை நினைவில் கொள்ள இயலவில்லை. என்னைக் காப்பாற்றிய மீட்புக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இல்லை என்றால் இன்று நான் இல்லை. இந்த தருணத்தில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

சாமான் கான் உடனடியாக, “ஆமாம்.. அப்போது (நீ) சின்னக் குழந்தை.. (நான்) நீண்ட நாட்களாக உன்னை தேடிக் கொண்டிருக்கிறேன். நான் (உன்னை) மீண்டும் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. உன்னைக் கண்டுபிடித்துவிட்டதாக ஊடகங்கள் கூறிய போது அதை என்னால் நம்பவே முடியவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

shanghaicondo_02இடிபாடுகளுக்கு இடையில் இருந்து நூர் ஹமிடாவை உயிருடன் மீட்ட பின்னர் தான் மீட்புக் குழுவில் பலருக்கும் ஒரு உத்வேகம் எழுந்தும் மேலும் பல பேரை மீட்கக் காரணமாக இருந்ததாகவும் சாமான் கான் அந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

ஓய்வு பெற்ற அதிகாரியான சாமான் கான், நூர் ஹமிடா இப்போது எப்படி இருக்கிறார் என்பதை அறிய பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். ஆனால் அவரால் நூர் ஹமிடாவைக் கண்டறியமுடியவில்லை.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், சம்பவம் நடந்து 10 நாட்களுக்குப் பிறகு நூர் ஹமிடா மீட்கப்பட்ட போது எடுத்து புகைப்படம் ஒன்றையும் சாமான் கான் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

அதோடு, அந்தத் துயரச் சம்பவம் நடந்த இடத்தை மீண்டும் பார்வையிட்டதோடு, பணிப்பெண்ணாக தான் வேலை பார்த்த முதலாளியான சூசன் டானையும் (வயது 76) சந்தித்துள்ளனர்.

கடந்த 1993- ஆண்டு, டிசம்பர் 11-ம் தேதி, உலுகிள்ளானிலுள்ள தாமான் ஹில்வியூவில் அமைந்திருந்த ஹைலேண்ட் டவரின் 1-வது அடுக்குமாடிக் குடியிருப்பு சரிந்து விழுந்தது. இதில் 48 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.