புதுடெல்லி – பண மோசடி மற்றும் வங்கிகளுக்கு கடனை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லைய்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) பொறுப்பை நீக்கம் செய்ய நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது லண்டனில் இருக்கும் விஜய் மல்லைய்யாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில், அவரை நாடு கடத்தி கொண்டு வருவது பற்றி மத்திய அரசு சட்ட ரீதியிலான ஆலோசனை பெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு, விஜய் மல்லைய்யாவின் நிலைப்பாடு மற்றும் பதில் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இன்று மாலை நடந்த இந்த குழுவின் கூட்டத்துக்கு பின்பு அதன் தலைவர் கரண்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாவது:- இன்றைய கூட்டத்தில் விஜய் மல்லைய்யாவின் டெல்லி மேல்-சபை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படவேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டது.
எனினும், இதில் நடைமுறைகள் உள்ளன. அதன்படி, இதில் அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை அறிய ஒருவார கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இதற்காக அவருக்கு நோட்டீசு அனுப்பப்படும். இதற்கு சரியான பதிலை அளிக்காவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நெறிமுறைக்குழு பரிந்துரை செய்யும் என அவர் கூறினார்.