கோலாலம்பூர் – அண்மையில் நடந்த சபா கடத்தல் சம்பவத்தை, சரவாக் மாநிலத் தேர்தல் பிரச்சாரங்களில் ஒரு அங்கமாகப் பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் ஆலோசனை கூறியுள்ளார்.
அவ்வாறு செய்யும் பட்சத்தில் அவர்களை விடுவிப்பதில் மேலும் சிக்கலையே ஏற்படுத்தும் என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.
“கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளை எங்களால் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்தப் பிரச்சனையைப் பயன்படுத்தி எங்களது பணியை கடினமாக்கிவிடாதீர்கள்” என்று பெட்டாலிங் ஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காலிட் தெரிவித்துள்ளார்.
சரவாக்கில் தற்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில், சில கட்சிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மேடையில் ஏற்றி அவர்களுக்கு உதவுவதாகவும், கடத்தப்பட்டவர்களை மீட்பதற்குத் தேவையான நிதி திரட்டுவதாகவும் கூறி வருவதை சுட்டிக் காட்டியுள்ள காலிட், அது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.