சென்னை – முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது சென்னை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூரில் கடந்த 25 ஆம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டு உரையாற்றினார். இளங்கோவன் பேசும்போது, முதலமைச்சர் ஜெயலலிதா மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
இதை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா குறித்து இளங்கோவன் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அதிமுகவினரிடையே கோபத்தை உருவாக்கியது. இதன் பின்னர் பல்வேறு இடங்களில் இளங்கோவனின் உருவபொம்மையை எரித்து அதிமுகவினர் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் இளங்கோவன் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இது குறித்து அமைச்சர் காமராஜ் அளித்த புகாரின் பேரில் திருவாரூர் போலீசார் இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இளங்கோவன் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.