புதுடெல்லி – வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி, இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளது.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது, கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார் என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விஜய் மல்லையாவுக்கு பிணையில் (ஜாமீனில்) வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும், விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதற்கிடையே, இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற மல்லையா, தற்போது இங்கிலாந்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பதுக்கப்பட்டிருந்த பணத்தில் இருந்து அங்கே அவர் சொத்துக்கள் வாங்கி, அதில் தங்கி வாழ்வதாகவும் செய்திகள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து, விஜய் மல்லையாவின் பாஸ்போட்டை முடக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு, அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவின் பயணக்கடப்பிதழை (பாஸ்போர்ட்டை) மத்திய அரசு தற்போது முடக்கியது.
மேலும், அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ‘லண்டனில் இருந்து விஜய் மல்லையாவை இந்தியா அனுப்ப வேண்டும்.
வங்கிகளிடம் கடன் பெற்று திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்குகள் விஜய் மல்லைய்யா மீது தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகளுக்காக, அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவேண்டும்’ என இந்தியா வலியுறுத்தியுள்ளது.