வாஷிங்டன் – கெப்ளர் தொலை நோக்கி மூலம் இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரிய கிரகக் கூட்டத்தைக் கண்டறிந்துள்ளதாக நாசா கூறியுள்ளது. கெப்ளர் மூலமாக 1284 புதிய கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
ஒரே கண்டுபிடிப்பில் இந்த அளவுக்கு கிரகக் கூட்டம் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதுவரை கெப்ளர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகக் கூட்டங்களின் எண்ணிக்கை இதன் மூலம் இரட்டிப்பாகியுள்ளதாக தலைமை விஞ்ஞானி எல்லன் ஸ்டோபன் கூறியுள்ளார்.
நமது சூரியக் குடும்பத்துக்கு அப்பால் மேலும் மேலும் பல நட்சத்திரக் கூட்டங்கள் இருப்பதையே இது உணர்த்துவதாக எல்லன் கூறினார். கெப்ளர் தொலைநோக்கி இதுவரை 4302 கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது.
அதில் ஒரே ஆய்வில் 1284 கிரகங்களை அது அடையாளம் கண்டு அறிவித்துள்ளது. இதுதவிர 1327 கிரகங்கள் அங்கீகாரத்துக்காக காத்துக் கொண்டுள்ளன. கெப்ளர் வருவதற்கு முன்பு வரை நமக்கு பிற கிரகங்கள் குறித்த தெளிவு இல்லாமல் இருந்து வந்தது.
ஆனால் கெப்ளர் தொலைநோக்கி வந்த பிறகு ஆயிரக்கணக்கான கிரகங்கள் நம்மைச் சுற்றிலும் இருப்பது தெரிய வந்தது என்பது குறிப்பிடதக்கது. பல்வேறு கிரகங்களிலிருந்தும் வரும் சமிக்ஞைகளை வைத்து அவற்றைப் பற்றிய தகவலை நமக்கு அளித்து வருகிறது கெப்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அது கண்டுபிடித்துள்ள கிரகக் கூட்டமானது பெரும்பாலானவை பாறைகளால் ஆனவை என்று தெரிய வந்துள்ளது. அதாவது பூமியைப் போல இவை உள்ளனவாம். இப்படிப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 550 ஆகும்.
இதுவரை மொத்தம் 5000க்கும் மேற்பட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 3200 கிரகங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் 2325 கிரகங்களை கெப்ளர் கண்டுபிடித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் கெப்ளர் விண்ணில் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.