Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: கொஞ்சம்கூட ஆங்கிலம் பேச முடியாமல் தடுமாறிய ஸ்டாலின்!

தமிழகத் தேர்தல்: கொஞ்சம்கூட ஆங்கிலம் பேச முடியாமல் தடுமாறிய ஸ்டாலின்!

690
0
SHARE
Ad

m.k.stalinசென்னை – இன்றைய நவீன யுகத்தில் ஓர் அரசியல் கட்சியின் தலைவராக இருப்பவருக்கும், அதிலும் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவருக்கும் இருக்க வேண்டிய தவிர்க்க முடியாத திறன், ஆங்கில அறிவு!

ஆங்கில மொழியில் புலமையோ, பட்டமோ, பெற்றிருக்க வேண்டியதில்லை என்றாலும், வெளிநாட்டு வணிக நிறுவனப் பிரதிநிதிகள், வெளிநாட்டுத் தலைவர்கள் ஆகியோரைச் சந்திக்கும்போதும், புதுடில்லியில் மற்ற கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், மற்றும் மத்திய அரசாங்க அதிகாரிகளைச் சந்திக்கும்போதும் அவர்களோடு சரிசமமாகப் பேசுவதற்காக, ஒரு தலைவருக்கு எளிமையான ஆங்கிலத்திலாவது உரையாடக் கூடிய திறன் இருக்க வேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம்.

அத்தகைய திறமை இல்லாவிட்டால், ஆங்கிலத்தில் உரையாடும் வல்லமையை ஒரு தலைவர் வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, இந்திய நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் அவ்வளவாக ஆங்கிலம் பேசாத நரேந்திர மோடி, இன்று வெளிநாடுகளில் மேடையேறி ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குகின்றார்.

#TamilSchoolmychoice

சில மாதங்களுக்கு முன்னால் சிங்கப்பூர் வந்தபோது, பல்கலைக் கழகத்தில் முழுமையாக ஆங்கிலத்திலேயே பேசி அனைவரையும் அசர வைத்தார்.

அந்த வகையில் பார்த்தால், ஆங்கிலப் புலமையில் இன்றைய தமிழகத் தலைவர்களின் முன்னணி வகிப்பது ஜெயலலிதாவும், வைகோவும்தான். ஜெயலலிதாவின் நளினமான ஆங்கில உரையும், அழகான உச்சரிப்பும் அனைத்து இந்தியாவிலும் பலரையும் கவர்ந்ததாகும்.

வைகோவுக்கோ அவரது வழக்கறிஞர் படிப்பு அவரது ஆங்கில அறிவுக்கு பெரிதும் துணை நிற்கின்றது.

இவர்களை அடுத்து இன்னொருவரைச் சொல்லலாம் என்றால் அது டாக்டர் அன்புமணி இராமதாஸ்தான். அவரது மருத்துவர் பட்டப் படிப்பு, அவரது ஆங்கிலப் புலமைக்கு உறுதுணையாக நிற்கின்றது.

ஆங்கிலத்தில் சிலவார்த்தைகள் கூட பேச முடியாத ஸ்டாலின்

திமுகவின் அடுத்த தலைவராகவும், திமுக வென்றால் கலைஞர் கருணாநிதிக்குப் பிறகு முதலமைச்சராவார் எனவும் பிரகடனப்படுத்தப்படும், மு.க.ஸ்டாலின் இதுவரை எங்கும் ஆங்கிலம் பேசி யாரும் கேட்டதில்லை.

அண்மையில் என்டிடிவி 7 ஆங்கில தொலைக்காட்சி ஸ்டாலினுடன் நடத்திய பேட்டியின்போது, பேட்டி எடுத்த பத்திரிக்கையாளர் ஆங்கிலத்தில் கேள்விகளைத் தொடுத்தபோது, சில வார்த்தைகள் கூட ஆங்கிலத்தில் பதில் சொல்ல முடியாமல் தடுமாறிய ஸ்டாலின், பின்னர் முழுக்க முழுக்க தமிழிலேயே பதில் சொல்லத் தொடங்கினார்.

இதைப் பார்க்கும் படித்த இளைஞர்கள் யாருக்கும் இந்த அளவுக்குக் கூட எளிமையான ஆங்கிலம் பேசக் கூட முடியாமல் ஸ்டாலின் தடுமாறுகின்றாரே என்ற எண்ணம் ஏற்படாமல் இருக்காது.

40 வருடங்களாக கட்சியில் உழைத்து வருகின்றார் அதனால் தலைமையை ஏற்கத் தகுதியானவர் எனப் பிரகடனப்படுத்தப்படும், ஒரு பட்டதாரியான ஸ்டாலின் தனது தகுதிகளில் ஒன்றாக எளிமையாக ஆங்கிலத்தில் பேசும் திறனையும் வளர்த்துக் கொண்டிருக்கலாம்.

ஸ்டாலின் பேட்டியைக் கொண்ட அந்த காணொளியைக் கீழே காணலாம்:-

இரா.முத்தரசன்

(செல்லியல் நிர்வாக ஆசிரியர்)