Home Featured தமிழ் நாடு “ஸ்டாலினை அவமதிக்கும் நோக்கமில்லை! கலந்து கொண்டதற்கு நன்றி” ஜெயலலிதாவின் எதிர்பாராத பதில்!

“ஸ்டாலினை அவமதிக்கும் நோக்கமில்லை! கலந்து கொண்டதற்கு நன்றி” ஜெயலலிதாவின் எதிர்பாராத பதில்!

903
0
SHARE
Ad

சென்னை – “ஸ்டாலினை அவமதிக்கும் நோக்கம் எனக்கில்லை. எனது பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொண்டதற்கு நன்றி. அவருக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மாநிலத்தின் மேம்பாட்டுக்காக அவருடைய கட்சியுடன் இணைந்து பணியாற்றும் தருணத்தை நான் மிகவும் எதிர்பார்க்கின்றேன்” –

Jayalalitha-swearing in- stageஜெயலலிதாவின் இந்த பதிலால், தமிழகமே அதிர்ச்சியால் இன்று உறைந்துவிட்டது.

ஆம்! ஜெயலலிதாவிடமிருந்து இத்தகைய பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லைதான்.

#TamilSchoolmychoice

ஸ்டாலினுக்கு முறையான இருக்கை தராத காரணத்தால், கருணாநிதி விடுத்த அறிக்கையில், தரக் குறைவும், வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் நிறைந்து கிடந்தது.

ஆனால், கண்ணியம் காத்தார் ஸ்டாலின். எந்த இடத்தை வழங்கினாலும், பரவாயில்லை என்பது போல் அமைதியாக பதவியேற்பு விழாவில் கலந்து விட்டு, சென்ற ஸ்டாலின் பதவியேற்பு முடிந்ததும்,

Jayalalitha-swearing-vip-stalin“இப்போதுதான் தமிழக முதல்வரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன். அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் எனவும் தமிழக மக்களுக்காகப் பாடுபடுவார் என்றும் நம்புகின்றேன். அவருக்கு எனது வாழ்த்துகள்” என தனது டுவிட்டரிலும் பதிவிட்டார் அவர்.

Stalin-twitter-wishing Jayalalithaஆனால், அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவரது தந்தை கருணாநிதியிடம் இருந்து புறப்பட்டது, அவரது ஆழ்மனதின் கசப்பும், வெறுப்பும், காழ்ப்பும் ஒருங்கே கலந்த கலவையாக ஓர் அறிக்கை.

ஸ்டாலினுக்கு பின்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது குறித்து இன்று விளக்கம் தந்த ஜெயலலிதா “பொதுப்பணித்துறைதான் யார் எங்கு உட்காருவது என்பதை முடிவு செய்தது. பதவியேற்பு நிகழ்ச்சிக்கு யார் எங்கே அமர்வது என அரசு பின்பற்றும் விதிகளைப் பின்பற்றித்தான் ஸ்டாலினுக்கு மண்டபத்தில் இருக்கை ஒதுக்கப்பட்டது. இந்த இருக்கை ஒதுக்கீடு அவருக்கு எந்தவிதத்திலாவது சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றால், அவரையோ, அவரது கட்சியையோ அவமதிப்பது நோக்கமல்ல என அவருக்கு உறுதியளிக்க விரும்புகின்றேன்” என்று கூறியுள்ளார்.

“ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளப் போகிறார் என்பதை அதிகாரிகள் எனது பார்வைக்கு முன்கூட்டியே தெரிவித்திருந்தால், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கான அதிகாரிகளிடம், அரசு விதிகளைத் தளர்த்தச் சொல்லி, அவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கியிருப்பேன்” என்றும் ஜெயலலிதா மேலும் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் இன்றைய பதில் அறிக்கை, நேற்று கருணாநிதி கொந்தளித்து விடுத்த அறிக்கைக்கு பதிலடியாக அமைந்திருக்கின்றது. தோற்றுப்போன சரத்குமாருக்கு முன் வரிசைகளில் இடம் கொடுத்து விட்டு, தேர்தலில் வென்று எதிர்க்கட்சித் தலைவராகப் போகும் ஸ்டாலினுக்கு பின்வரிசையில் இடம் கொடுத்திருக்கின்றார்கள் என கருணாநிதி நேற்று அறிக்கை விடுத்திருந்தார்.