Home Featured நாடு அமெரிக்காவில் ‘புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு’ – முத்து நெடுமாறன், இளந்தமிழ் தலைமையில் மலேசியக் குழு...

அமெரிக்காவில் ‘புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு’ – முத்து நெடுமாறன், இளந்தமிழ் தலைமையில் மலேசியக் குழு பயணம்!

1322
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் மே 27 முதல் 30ஆம் தேதி வரை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சாந்தா கிளாரா என்னும் நகரில் அனைத்துலக ரீதியான மாநாடாக ‘புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு’ மாநாடு நடைபெறுகின்றது.

அமெரிக்காவில் உள்ள அனைத்துலகத் தமிழ்க் கல்விக் கழகம் (இண்டர்நேஷனல் தமிழ் அகாடமி) ஏற்பாட்டில் நடைபெறும் இரண்டாவது அனைத்துலக மாநாடு இதுவாகும்.

இந்த மாநாட்டில் சிறந்த கல்வியாளர்களையும், தமிழ்க் கல்வி போதிப்பதில் திறமையும், ஆர்வமும் கொண்டவர்களையும் கொண்ட 20 பேர் கொண்ட மலேசியக்குழு கலந்து கொள்கின்றது.

#TamilSchoolmychoice

muthu-nedumaranElanthamiz-Uthamam-Slider

            முத்து நெடுமாறன்                                                                சி.ம.இளந்தமிழ்

மலேசியக் குழுவுக்கு முத்து நெடுமாறன், சி.ம.இளந்தமிழ் ஆகிய இருவரும் தலைமையேற்றுச் செல்கின்றனர்.

முத்து நெடுமாறன் தமிழ்க் கணினி துறை வல்லுநர் என்பதோடு, முரசு அஞ்சல் மென்பொருள் உருவாக்குநரும், செல்லினம், செல்லியல் குறுஞ்செயலிகளில் வடிவமைப்பாளரும் ஆவார். இளந்தமிழ், உத்தமம் எனப்படும் உலகத் தமிழ் தொழில்துட்ப தகவல் மன்றத்தின் மலேசியக் கிளையின் தலைவராவார்.

புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டை நடத்தும் அனைத்துலக தமிழ்க் கல்விக் கழகத்தின் தலைவரான வெற்றிச் செல்வி இராஜமாணிக்கம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி மாதவாக்கில் மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டபோது இந்த மாநாடு நடைபெறுவது குறித்த விளக்கங்களைத் தந்ததோடு, மலேசியக் கல்வியாளர்களுக்கு கலந்து கொள்ள அழைப்பும் விடுத்தார்.

Vetri Selvi-press ocnf-muthu-elanthamilபிப்ரவரி 2016இல் மலேசியாவுக்கு வருகை தந்த ‘புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டின்’ ஏற்பாட்டுக் குழுத் தலைவர்  வெற்றிச் செல்வி நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் (இடமிருந்து) சி.ம.இளந்தமிழ், வெற்றிச் செல்வி, முத்து நெடுமாறன்…

இந்த மாநாட்டுக்கு வரும் மலேசியக் குழுவினரை ஒருங்கிணைப்பதிலும், தலைமை தாங்கி அழைத்து வருவதற்கும், முத்து நெடுமாறன், இளந்தமிழ் இருவரும் இணைத் தலைவர்களாக செயல்படுவார்கள் என்றும் வெற்றிச் செல்வி (படம்) அப்போது நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார்.

Vetri Selvi-USA-International Tamil Academyஇதனைத் தொடர்ந்து, முழுக்க, முழுக்க கல்வியாளர்களையும், தமிழ்க் கல்வி போதிப்பதில் ஆர்வமும், திறமையும், அனுபவமும் கொண்டவர்களைக் கொண்ட ஒரு சிறந்த குழு ஒருங்கிணைக்கப்பட்டு, இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக முத்து நெடுமாறனும், இளந்தமிழும் செல்லியலிடம் தெரிவித்தனர்.

ஆசிரியர்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி பட்டதாரிகள், முனைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என பன்முகத் திறன்களைக் கொண்ட மலேசியக் குழுவினர் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மலேசியக் கல்வியாளர்கள் கட்டுரைகள்

இந்த புலம் பெயர்ந்தோர் மாநாட்டில் சிறந்த மலேசியக் கல்வியாளர்களின் கட்டுரைகளும் படைக்கப்படவிருக்கின்றன.

Dr Mullai Ramaiahமுனைவர் முல்லை இராமையா…

தமிழ் கற்றலில் ஏற்படக்கூடிய பின்னடைவுகளையும், டிஸ்லெக்சியா குறைபாட்டினால் மாணவர்களுக்கு ஏற்படும் சவால்கள் குறித்தும் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வரும் முனைவர் முல்லை இராமையா இந்த மாநாட்டில் கலந்து கொண்டு, “ஒலி வழி கற்றல் கற்பித்தல்” பற்றிய உரையொன்றை நிகழ்த்துவதோடு, பயிற்சிப் பட்டறை ஒன்றையும் நடத்தவிருக்கின்றார்.

பேச்சு மொழி, எழுத்து மொழி குறித்த ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் மலேசியாவைப் பிரதிநிதித்து முல்லை இராமையா கலந்து கொள்கிறார்.

புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி என்று வரும்போது கடந்த இருநூறு ஆண்டுகளாக, மற்ற மொழிகளோடு தமிழ் மொழியையும் கற்பித்து வரும் சவாலான சூழல் மலேசியா, சிங்கப்பூர் இருநாடுகளிலும் இருந்து வருகின்றது.

நவீன யுகத்தில் மாணவர்களுக்கு தமிழை எளிமையாக போதிப்பது எப்படி என்பதை புதுமையான பாணியில், புத்தாக்க முறையில் எடுத்துக் கூறும் கட்டுரையாக “எல்லோருக்கும் எளிய தமிழ்” என்ற ஆய்வுக் கட்டுரையும் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.

Kasturi Ramalingam“எல்லோருக்கும் எளிய தமிழ்” என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை படைக்கும் கஸ்தூரி இராமலிங்கம்…

மாசாய் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை கஸ்தூரி இராமலிங்கம், முத்து நெடுமாறன் ஆகிய இருவரும் இணைந்து இந்தக் ஆய்வை உருவாக்கியிருக்கின்றனர். மாநாட்டில் கஸ்தூரி இராமலிங்கம் இந்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்கின்றார்.

மாநாட்டில், மற்ற மலேசியப் பேராளர்கள் சமர்ப்பிக்கும் கட்டுரைகள் குறித்த விவரங்களும் செல்லியலில் தொடர்ந்து வெளியிடப்படும்.

முத்து நெடுமாறன் கருத்து

muthu-nedumaranஇந்த மாநாடு குறித்து, மலேசியக் குழுவுக்கு இணைத் தலைமையேற்கும் முத்து நெடுமாறன் கருத்துரைத்தபோது “கணிசமான எண்ணிக்கையில், அதுவும் அறிவார்ந்த ஓர் குழுவினர் இந்த மாநாட்டில் ஆர்வமுடன் கலந்து கொள்ளவும், ஆய்வுக் கட்டுரைகள் படைக்கவும் முன்வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது அனுபவங்களை மற்றவர்களோடு நாம் பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில், மற்ற நாடுகளில் உள்ளவர்களின் அனுபவங்களிலிருந்தும் நாம் தமிழ்க் கல்வி குறித்து இந்த மாநாட்டின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்” என்று கூறினார்.

“இந்த மாநாட்டின் மூலம் தமிழ்க் கல்வி கற்பிப்பது தொடர்பில் மலேசியாவிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் முன்னெடுத்துச் செல்லும்  வகையில் புதிய வெளிச்சம் பாய்ச்சும் பாதைகள் திறக்கப்படும் – புதிய கண்டுபிடிப்புகள் வெளிக் கொண்டுவரப்படும் என நம்புகின்றேன்” என்றும் முத்து நெடுமாறன் மேலும் தெரிவித்தார்.

சி.ம.இளந்தமிழ் கருத்து

Elanthamiz-Featureஇந்த மாநாடு குறித்து கருத்து கேட்டபோது, “இந்த மாநாட்டில் ஒருவனாகப் பங்கு பெறுவது குறித்தும் மலேசியக் குழுவுக்கு இணைத் தலைமை ஏற்றிருப்பதிலும் நான் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றேன். பல நிலைகளிலும் உள்ள தமிழ்க் கல்வி பயிற்றுவிப்பாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதால், அவர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் அவர்களின் அறிவாற்றலையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதோடு, இதன் மூலம் தமிழ் கூறு நல்லுலகமும் மிகப் பெரிய பயன்களை அடைய முடியும்” என்று மலேசியக் குழுவின் இணைத் தலைவரான இளந்தமிழ் தெரிவித்தார்.

இந்த மாநாடு குறித்த விவரங்கள் தொடர்ந்து செல்லியலில் வெளியிடப்படும்.

(அடுத்து: அமெரிக்காவில் நடைபெறும் ‘புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டின் பின்புலம் – நோக்கங்கள்)