சென்னை – முதலமைச்சர் பதவியேற்பு விழாவில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு கடைசி வரிசையில் இருக்கை வழங்கப்பட, கொதித்துப் போன கருணாநிதி “ஜெயலலிதா திருந்தவே மாட்டார்” என கொளுத்திப் போட, வழக்கம் போல் இரு கட்சிகளுக்கிடையிலான குறைகூறல்கள் பதவி ஏற்பு விழாவிலேயே தொடங்கிவிட்டதா? என்று சலித்துக் கொண்டிருந்த தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தது ஜெயலலிதாவின் விளக்கம்.
“ஸ்டாலினை அவமதிக்கும் நோக்கம் எனக்கில்லை. எனது பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொண்டதற்கு நன்றி. அவருக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மாநிலத்தின் மேம்பாட்டுக்காக அவருடைய கட்சியுடன் இணைந்து பணியாற்றும் தருணத்தை நான் மிகவும் எதிர்பார்க்கின்றேன்” என்று ஜெயலலிதா கூறியிருப்பது யாருமே எதிர்பார்த்திராத ஒன்று.
ஏன் கருணாநிதியே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்!
அதற்கு ஏற்ப ஸ்டாலினும் மிக நாகரீகமாக நடந்து கொண்டு வருகின்றார்.
“இப்போதுதான் தமிழக முதல்வரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன். அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் எனவும் தமிழக மக்களுக்காகப் பாடுபடுவார் என்றும் நம்புகின்றேன். அவருக்கு எனது வாழ்த்துகள்” என தனது டுவிட்டரிலும் பதிவிட்டார்.
15-வது தமிழக சட்டமன்றத்தின் துவக்கத்திலேயே, முதலமைச்சருக்கும், எதிர்கட்சித் தலைவருக்குமிடையே இவ்வளவு நாகரீகமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்திருப்பது மக்களை ஆச்சர்யப்படுத்தியிருப்பதோடு, இது தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்டாலின் பின் வரிசைக்கான காரணம் என்ன?
ஸ்டாலின் பின்வரிசையில் அமர்ந்ததற்கான காரணமாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுவது என்னவென்றால், பொன்முடி உட்பட ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களுடன் அங்கு வந்த போது, அரங்கம் நிறைந்துவிட்டதாகவும், அப்போது அங்கிருந்த அதிகாரிகள், ஸ்டாலினை முன்னே வரும்படி அழைத்தும் கூட, தான் அவர்களுடனேயே அமர்ந்து கொள்வதாக ஸ்டாலின் கூறிவிட்டதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், ஜெயலலிதா தரப்பிலும் ஸ்டாலின் இவ்விழாவில் கலந்து கொள்வார் என்பதை அறிந்திருக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
“ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளப் போகிறார் என்பதை அதிகாரிகள் எனது பார்வைக்கு முன்கூட்டியே தெரிவித்திருந்தால், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கான அதிகாரிகளிடம், அரசு விதிகளைத் தளர்த்தச் சொல்லி, அவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கியிருப்பேன்” என்றும் ஜெயலலிதாவே தனது விளக்கத்திலும் அதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
தனக்குப் பின்வரிசையில் இருக்கை வழங்கப்பட்டது குறித்து ஸ்டாலின் எந்த ஒரு கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. மாறாக திமுக தலைவர் கருணாநிதி தான் அது குறித்து மிகவும் ஆத்திரத்துடன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அதிரடித் துவக்கம்
இந்த முறை பதவியேற்பு விழாவே வழக்கத்திற்கு மாறாக பல மாற்றங்களோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜெயலலிதாவைத் துதிபாடும் கட்டவுட்கள், அமைச்சர்கள் காலில் விழும் கலாச்சாரம் போன்றவை அடியோடு ஒழிக்கப்பட்டிருந்தன.
அதையும் மீறி காலில் விழுந்த அமைச்சர் ஒருவரை ஜெயலலிதா முறைத்துப் பார்த்த விதம், இந்த விசயத்தில் அவர் விழித்துக் கொண்டதை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது.
அதேவேளையில், முதலமைச்சராகப் பதவியேற்றதும் உடனடியாக தலைமைச் செயலகம் சென்ற ஜெயலலிதா தனது பணிகளைத் தொடங்கினார். முதல் கட்டமாக பதவியேற்ற அன்று 5 கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.
அவர் கையெழுத்திட்ட 5 கோப்புகளில், விவசாயக் கடன் தள்ளுபடி, தாலிக்கு 8 கிராம் வழங்கும் திட்டம், 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு அதனை இலவசமாக வழங்கும் திட்டம் மற்றும் டாஸ்மாக் எனப்படும் மதுபான விற்பனைக் கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைக்கும் திட்டம் ஆகியவை அடங்கும்.
அதோடு, காலை 10.00 மணிக்குத் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் இனி நண்பகல் 12.00 மணிக்குத்தான் திறக்கும் என்ற அறிவிப்பு, தமிழகத்தில் எத்தனையோ பெண்களுக்கு மனதில் ஆறுதலையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் இந்த திடீர் மாற்றங்கள் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகவும், தமிழகத்திற்கு பயன்படும் படியும் அமைய வேண்டும் என்பதே தற்போது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
அதேவேளையில், எதிர்கட்சித் தலைவராக ஸ்டாலின், 5 ஆண்டுகளும் இதே கண்ணியத்தைக் காத்து, குறை கூறல்களைத் தவிர்த்து, தேவையான முன்னேற்றங்களைச் சுட்டிக் காட்டி தமிழகத்திற்கும், மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்றும் மக்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய சட்டமன்றத்தில் பரஸ்பர வணக்கம்
15-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் துவங்கியது. முதலமைச்சர் ஜெயலலிதா 10.52 மணிக்கு சட்டமன்றத்திற்கு வந்தார். அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு ஜெயலலிதா தனது இருக்கையில் அமர்ந்தார்.
அப்போது அவருக்கு நேரே எதிர் வரிசையில் அமர்ந்திருந்த எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தன் இருக்கையில் இருந்த படி ஜெயலலிதாவுக்கு வணக்கம் தெரிவித்தார்.உடனே முதல்வர் ஜெயலலிதாவும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார்.
இருவருக்குமிடையிலான இந்த நாகரீகம், சட்டமன்றத்தில் அமர்ந்திருந்த அமைச்சர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
யார் இன்னும் திருந்தவில்லை? தமிழக மக்களா?
வெற்றி பெற்ற அண்டை மாநில முதல்வர்களுக்கு மட்டும் வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு, தனது சொந்த மாநில முதல்வருக்கு வாழ்த்து சொல்ல மனது வராத கருணாநிதி, பரஸ்பர மரியாதை குறித்து பேசுவது ஏன் என்று கேள்வி எழத் தான் செய்கின்றது.
கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் புதிய முதல்வர்களாகப் பதவியேற்பவர்களுக்கு தனித்தனியாக அவர் வாழ்த்துக் கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இன்று வரை ஜெயலலிதாவுக்கு அவர் வாழ்த்தும் கூறவில்லை, கடிதமும் எழுதவில்லை. இத்தகைய கண்ணியம் இல்லாத கருணாநிதி தனது மகனுக்கு இருக்கை வழங்கவில்லை என்பதில் மட்டும் கண்ணியம், மரியாதை பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம் என கிழிகிழியென கிழித்துத் துவைக்கின்றன தமிழகத் தகவல் ஊடகங்கள்.
“ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது! தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும்!”
“முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலேயே பிறவிக்குணத்தை விடாத ஜெயலலிதாவின் பழி வாங்கும் போக்கு!”
“தோற்றுப்போன சரத்குமாருக்கு முன்வரிசை.. ஸ்டாலினுக்குப் பின்வரிசையா” என இப்போதே தனது வழக்கமான குறைகூறல்களுக்கு தூபம் போட்டுவிட்ட கருணாநிதி, இனியாவது திருந்தி திமுக தலைவராகவும், மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவராகவும், தமிழ்நாட்டையும், மக்களையும் யோசித்து அவர்களின் தேவைகளுக்காகக் குரல் கொடுப்பாரா?
– செல்லியல் தொகுப்பு