கோலகங்சார் – நாட்டின் நடப்பு அரசியல் சூழ்நிலையை – மக்களின் மனப் போக்கை -பிரதிபலிக்கக் கூடியவை என விரைவில் நடைபெறப் போகும் இரண்டு இடைத் தேர்தல்களையும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், கோலகங்சார் இடைத் தேர்தல் முன்னேற்பாடுகளை மஇகா பேராக் மாநிலத் தலைவரும், பேராக் மாநில அரசின் இந்தியர் பிரதிநிதியுமான டத்தோ இளங்கோ சுறுசுறுப்பாகத் தொடங்கியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தேசிய முன்னணிக்கு ஆதரவான இந்தியர் கட்சிகளையும், அமைப்புகளையும் ஒன்று திரட்டி ஒரு சந்திப்புக் கூட்டத்திற்கு டத்தோ இளங்கோ ஏற்பாடு செய்திருந்தார்.
கோலகங்சார் இடைத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு சந்திப்புக் கூட்டத்தில் டத்தோ இளங்கோ உரையாற்றுகின்றார்…
தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளான மஇகா, மற்றும் மைபிபிபி சார்பில் அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் கலந்து கொள்ள, தேசிய முன்னணியின் தோழமைக் கட்சிகளான ஐபிஎப் சார்பில் மதியழகன், டத்தோ பஞ்சமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்தியர் ஒற்றுமைக் கட்சித் தலைவரான டத்தோ நல்லாவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மேடையில் அமர்ந்திருக்கும் மஇகா மற்றும் தேசிய முன்னணி தோழமைக் கட்சிகளின் தலைவர்கள்…
சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் கோலகங்சார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வான் முகமட் கைரில் அனுவார் காலமானதைத் தொடர்ந்து இங்கு இடைத் தேர்தல் நடைபெறுகின்றது.
கடந்த 2013 தேர்தலில் இந்தத் தொகுதியில் தேசிய முன்னணி 14,218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. பக்காத்தான் ராயாட் கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஸ் கட்சி 13,136 வாக்குகள் பெற்று தோல்வி கண்டது.
இருப்பினும் வெறும் 1,082 வாக்குகள் வித்தியாசத்திலேயே தேசிய முன்னணி இங்கு வென்றுள்ளதால், இந்த முறை போட்டி கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கோலகங்சார் நாடாளுமன்றத் தொகுதியை மீண்டும் தேசிய முன்னணிக்கே வென்றெடுப்போம் என முழக்கமிடும் வகையில் மேடையில் மாலை மரியாதைகளுடன் தேசிய முன்னணி ஆதரவுக் கட்சிகள் – அமைப்புகளின் தலைவர்கள்…
கோலகங்சாரில் மீண்டும் பாஸ் கட்சி போட்டியிடும் என உறுதியுடன் தெரிவித்துள்ள நிலையில், அங்கு பக்காத்தான் ஹாராப்பான் சார்பில் அமானா நெகாரா கட்சியும் இங்கு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு மும்முனைப் போட்டி நடந்தால், தேசிய முன்னணிக்கு சாதகமாக அமையுமா – அல்லது எதிர்க் கட்சிக் கூட்டணிக்கு தோல்வியைக் கொண்டு வந்து தருமா என்பதில் அரசியல் பார்வையாளர்களிடையே முரண்பாடான ஆரூடங்கள் நிலவுகின்றன.
கோலகங்சார் தொகுதிக்கு எதிர்வரும் ஜூன் 5ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலும், ஜூன் 18ஆம் தேதி வாக்களிப்பும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.