ஈப்போ : பேராக் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டிருக்கும் சரானி முகமட்டுக்கு நேற்று வியாழக்கிழமை மஇகா பேராக் மாநிலத் தலைவர் டத்தோ வி.இளங்கோவும் தொகுதித் தலைவர்கள், பொறுப்பாளர்களும் இணைந்து நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசியக் கூட்டணி ஆட்சியில், பேராக் ஆட்சிக் குழுவிலும் மந்திரி பெசார் அலுவலகத்திலும் இந்தியர் பிரதிநிதிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக பேராக் இந்தியர்கள் மத்தியில் கடும் அதிருப்திகள் எழுந்துள்ளன.
இந்த முறை மஇகா அங்கம் வகிக்கும் தேசிய முன்னணியின் மற்றொரு உறுப்பியக் கட்சியான அம்னோவின் சார்பில் புதிய மந்திரி பெசார் நியமிக்கப்பட்டிருப்பதால், மந்திரி பெசார் அலுவலகத்தில் இந்தியர்களின் சிறப்பு பிரதிநிதி நியமிக்கப்படுவார் என தாங்கள் எதிர்பார்ப்பதாக டத்தோ இளங்கோ தெரிவித்துள்ளார்.
அந்தப் பிரதிநிதியை மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் முடிவு செய்வார் என்றும் இளங்கோ கருத்து தெரிவித்தார்.
இதற்கிடையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் சரானி முகமட் பேராக் மாநிலத்துக்கான இந்தியர் பிரதிநிதி குறித்து விரைவில் முடிவெடுப்பேன் எனக் கூறியிருக்கிறார்.
மஇகா சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லை. எனவே, வழக்கமாக மஇகா பிரதிநிதி ஒருவர் மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, இந்தியர்களுக்கான விவகாரங்களைக் கவனித்து வருவார்.
இந்த நடைமுறை கடந்த காலங்களில் பின்பற்றப்பட்டிருக்கிறது. இந்த முறையும் இதே போன்ற நடைமுறை பின்பற்றப்படுமா என்பதைக் காண பேராக் இந்தியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.