கோலாலம்பூர் : துன் மகாதீர் புதிதாகத் தோற்றுவித்துள்ள பெஜூவாங் கட்சியின் பதிவு தாமதப்படுவது தொடர்பில் மலேசிய சங்கங்களின் பதிவிலாகா மீது அந்தக் கட்சி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
1966-ஆம் ஆண்டின் சங்கங்களுக்கான சட்டத்தின் அடிப்படையில் ஒன்று கட்சியை அதிகாரபூர்வமாக பதிவு செய்ய வேண்டும் அல்லது பதிவு செய்ய முடியாது என்ற பதிலை சங்கப் பதிவிலாகா வழங்க வேண்டும் என சங்கப் பதிவிலாகா முடிவெடுக்க வேண்டும் என அந்த வழக்கில் உத்தரவை பிறப்பிக்க பெஜூவாங் கட்சி தனது வழக்கில் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன் தொடர்பில் உயர்நீதிமன்றம் சங்கப் பதிவிலாகாவை ஏதாவது ஒரு முடிவு தெரிவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த வழக்கில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த விவரங்களை பெஜூவாங் கட்சியின் தலைமைச் செயலாளர் அமிருடின் ஹம்சா தெரிவித்தார். தாங்கள் அனுப்பிய கடிதங்களுக்கும் சங்கப் பதிவிலாகா பதிலளிக்காமல் தாமதப்படுத்துவதால் இது தங்களின் கட்சியின் பதிவை தாமதப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்றும் வழக்கின் மனுவில் அமிருடின் ஹம்சா தெரிவித்திருக்கிறார்.
சங்கப் பதிவிலாகாவும், அதன் தலைமை இயக்குநரும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.