ஒர்லாண்டோ – அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆப்கன் வம்சாவளி அமெரிக்கரான ஓமார் மாட்டின் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 50 பேர் பலியாகினர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அல்-பயான் என்ற வானொலியை நடத்தி வரும் ஐஎஸ் அமைப்பு, அதில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஓமார், தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர் என்று அறிவித்துள்ளது.
இதனிடையே, இச்சம்பவத்திற்குப் பிறகு ஓமார் குறித்து எபிஐ நடத்திய விசாரணையில், கடந்த 2013-ம் ஆண்டில் இருந்தே காவல்துறை ஓமாரைக் கண்காணித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு முதல் உலகின் மிகப் பெரிய தனியார் பாதுகாப்பு நிறுவனமான ஜி4எஸ்-ல் ஓமார் பணியாற்றி வந்ததால், அவன் நன்னடத்தையின் மீதான சந்தேகத்திற்கு வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, கைத்துப்பாக்கி மற்றும் நீண்ட குழல் துப்பாக்கி ஒன்றையும் ஓமார் சட்டப்பூர்வமாக வாங்கியிருக்கும் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் இரட்டை வர்த்தக கோபுரம் தாக்குதலுக்குப் பின் நடந்த மிகப் பெரிய தாக்குதல் இதுதான் என்று அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, “தீவிரவாதம் மற்றும் வெறுப்புணர்வின் பெயரில் நடத்தப்பட்ட மிகப் பெரிய படுகொலை” என்று தெரிவித்துள்ளார்.