Home Featured நாடு மலேசியாவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – அச்சுறுத்தும் பின்னணி!

மலேசியாவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – அச்சுறுத்தும் பின்னணி!

1337
0
SHARE
Ad

guns-1கோலாலம்பூர் – நாட்டில் தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், ஏன் பொதுமக்கள் உட்பட பலரையும் அச்சுறுத்தி வருகின்றது அண்மைய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்.

தொழிலில் போட்டி, பகை, பழிவாங்கல் என பல்வேறு காரணங்களுக்காக இது போன்ற கொலை சம்பவங்கள் நடப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகின்றது.

அதேவேளையில், குண்டர் கும்பல்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளும் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

#TamilSchoolmychoice

காவல்துறையால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள், பலர், இது போன்ற பழிவாங்கல் கொலைகளை நிகழ்த்த, காசு வாங்கிக் கொண்டு தொழில்முறைக் கொலைகாரர்களாகவும் மாறி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், கடந்த சில வாரங்களில் மட்டும், அடுத்தடுத்து நான்கு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன.

கடந்த ஜூன் 16-ம் தேதி, சுங்கை ராசாவ் சுங்கச் சாவடி அருகே 43 வயதான தொழிலதிபர் கூய் டான் ஹாக் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

shootdeadகடந்த ஜூன் 21-ம் தேதி, மிரி அருகே பிகேஆர் வேட்பாளர் பில் காயோங் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த பில் காயோங் கொல்லப்பட்டார்.

அதே ஜூன் 21-ம் தேதி, பத்துமலை அருகே சகோதரர்கள் இருவர் மர்ம நபர்களால் சுடப்பட்டனர். எனினும், அவர்கள் இருவரும் கடுமையான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இன்று ஜூன் 29-ம் தேதி, கோலாலம்பூர் – சிரம்பான் நெடுஞ்சாலையில், 40 வயதான நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரி மர்ம நபர்களால் சுடப்பட்டுள்ளார். அவர் உடம்பில் கை, கழுத்து என ஆறு குண்டுகள் துளைத்தும் அவர் அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

Bill kayong murderஇது தவிர கத்தி முனையில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அது தனி பட்டியலாக நீள்கிறது.

தொழிலதிபர் கூய் டான் ஹாக் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை விசாரணை செய்த காவல்துறை, கொலையாளி துப்பாக்கியைக் கையாண்ட நிபுணத்துவம் குறித்து ஆச்சரியமடைந்தது.

தொழில்முறையில் துப்பாக்கியைக் கையாள்பவர்களால் தான் அவ்வாறு நுட்பமாக சுடமுடியும் என்றும் காவல்துறைத் தரப்பில் கூறப்பட்டது.

இதனிடையே, பத்துமலை அருகே சகோதரர்கள் சுடப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் கூலிப்படையைச் சேர்ந்த கொலைகாரனை இன்று சுபாங் ஜெயா அருகே காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது.

அதேவேளையில், மற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்குக் காரணமானவர்களைத் தேடும் பணியிலும் காவல்துறை தீவிரம் காட்டி வருகின்றது.

modiva explosionநேற்று பூச்சோங்கில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்குக் கூட பழிவாங்கல் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

‘கவ்பாய்’ நாடாக மாறிவிட்டது

Musa-Hassanஇது குறித்து முன்னாள் தேசிய காவல்படைத் தலைவர் மூசா ஹசான் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “நம் நாடு இப்போது கவ்பாய் (cowboy) நாடாக மாறிவிட்டது. இன்று காலை கூட, சுங்கை பெசி அருகே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த விவகாரத்தில் காவல்துறை கடும் நடவடிக்கைகள் எடுக்கும் என நம்புகின்றேன். இதில் ஈடுபடும் இரகசிய கும்பல்களைக் கண்டறிய காவல்துறை ‘ஓப்ஸ் கந்தாசை’ கையில் எடுக்கும் நம்புகின்றேன் என்றும் மூசா ஹசான் தெரிவித்துள்ளார்.

தொகுப்பு:ஃபீனிக்ஸ்தாசன்