Home One Line P1 அசிலாவின் சத்தியப்பிரமாணம் விசாரிக்கப்பட வேண்டும்!- மூசா ஹசான்

அசிலாவின் சத்தியப்பிரமாணம் விசாரிக்கப்பட வேண்டும்!- மூசா ஹசான்

680
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அல்தான்துன்யா ஷாரிபு கொலை வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் சம்பந்தப்பட்டதாக அசிலா ஹாத்ரி கையெழுத்திட்ட சத்தியப்பிரமாணம் குறித்து காவல் துறை விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ மூசா ஹசான் அழைப்பு விடுத்துள்ளார்.

சத்தியப்பிரமாணம் வழங்கியவர் உள்ளிட்ட உண்மையைத் தீர்மானிக்க இது செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பான விசாரணையின் போது  சாட்சிகளின் அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றம் கேட்டு மதிப்பீடு செய்தது குறிப்பிடத்தக்கது என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

2006-இல் மங்கோலிய பெண்மணியான அல்தான்துன்யா சுட்டுக் கொல்லப்பட்டபோது மூசா காவல் துறைத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அல்தான்துன்யாவை நஜிப்புடன் இணைக்கும் அல்ஜசீரா ஆவணப்படத்தின் குற்றச்சாட்டுகளையும் 2015-இல் மூசா மறுத்தார்.

அல்தான்துன்யாவைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கை பிரிவின் இரண்டு முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரான அசிலா, அண்மையில் அக்கொலையில் நஜிப் சம்பந்தப்பட்டதாகக் கூறியிருந்தார்.

காஜாங் சிறையில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் அசிலா, அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜீப்,  நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்த அந்த பெண்மணியைக் கொலை செய்யக் கூறியதாக தமது சத்தியப்பிரமாணத்தில் தெரிவித்திருந்தார்.