டிரெண்டன்: சுமார் 15 மில்லியன் கனடியர்களின் பெயர்கள், முகவரிகள், கடவுச்சொற்கள் மற்றும் சுகாதாரப் பதிவுகள் நாட்டின் மிகப்பெரிய சுகாதார மருந்தகமான லைப்லேப்ஸில் ஏற்பட்ட இணையத் தாக்குதலில் திருடப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கனடாவின் மக்கள்தொகையில் சுமார் 40 விழுக்காடு ஆகும். மேலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் ஒன்ராறியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களில் வாழ்கின்றனர்.
இணைய ஊடுருவலை மேற்கொண்டவர்கள் பணத்தைக் கோருவதாகவும், மேலும் பணம் செலுத்தி திருடப்பட்ட தகவல்களைத் திரும்பப் பெற லைப்லேப்ஸ் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
“இந்த ஊடுருவலில், அணுகப்பட்ட கணினி அமைப்புகளில் சுமார் 15 மில்லியன் வாடிக்கையாளர்கள் தொடர்பான தகவல்கள் உள்ளன” என்று லைப் லேப்ஸ் தலைவர் சார்லஸ் பிரவுன் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு திறந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
“இந்த விஷயத்தில் நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன்” என்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் தனியுரிமை ஆணையர் மைக்கேல் மெக்வோய் செய்தி வெளியீட்டில் தெரிவித்தார்.
“முக்கியமான தனிப்பட்ட சுகாதார தகவல்களை மீறுவது பாதிக்கப்பட்டவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும்.” என்று அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள ஆய்வகங்களின் மூலம், லைப்லேப்ஸ் ஆண்டுக்கு சுமார் 112 மில்லியன் இரத்த பரிசோதனைகளை நடத்துகிறது.
இந்த ஊடுருவலுக்கு பிரவுன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
“பாதிக்கப்பட்ட அமைப்புகளை தனிமைப்படுத்தவும் பாதுகாக்கவும் உலகத் தரம் வாய்ந்த இணைய பாதுகாப்பு நிபுணர்களை நியமித்தல் மற்றும் எதிர்காலத்தில் இம்மாதிரியான சம்பவங்களைத் தடுக்க எங்கள் அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவோம்” என்று பிரவுன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் பற்றிய செய்தி நேற்று செவ்வாயன்று அந்நிறுவனத்தால் பகிரங்கப்படுத்தப்பட்டாலும், நவம்பர் 1-ஆம் தேதி இந்தத் தாக்குதல் நடந்ததாக நம்பப்படுகிறது.