Home உலகம் கனடா: ஜஸ்டின் டுருடோவுக்கு பதில் புதிய பிரதமர் யார்?

கனடா: ஜஸ்டின் டுருடோவுக்கு பதில் புதிய பிரதமர் யார்?

298
0
SHARE
Ad
ஜஸ்டின் டுருடோ மனைவியுடன்…

ஒட்டாவா: கனடாவின் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ பிரதமர் பதவியிலிருந்தும், கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக கடந்த ஜனவரியில் அறிவித்ததைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக பிரதமர் பொறுப்பை ஏற்கப் போகிறவர் யார் என்ற அறிவிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் வரி விதிப்புகள் தொடர்பான வணிகப் போர் தொடங்கியுள்ள வேளையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

புதிய பிரதமராகவும் கட்சித் தலைவராகவும் பெயர் குறிப்பிடப்படுபவர் சவாலான காலகட்டத்தில் அந்தப் பொறுப்புகளை ஏற்கவுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் வணிக வரி விதிப்பு தொடர்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு கனடாவுக்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டிய நெருக்கடியில் புதில் பிரதமர் உள்ளார்.

#TamilSchoolmychoice

அதே வேளையில் அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டிய இக்கட்டான நிலைமையையும் புதிய பிரதமர் எநிர்நோக்குவார்.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநரான (கவர்னர்) மார்க் கார்னி அடுத்த பிரதமராகப் பெயர் குறிப்பிடப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. கருத்துக் கணிப்புகளின்படி இவருக்கே அதிகமான லிபரல் கட்சியினர் ஆதரவு தருவதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் நிதியமைச்சரான கிறிஸ்டியா ஃபிரீலேண்ட் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் மற்றொரு வேட்பாளராகக் கருதப்படுகிறார்.

கடந்த டிசம்பர் 2024-இல் கிறிஸ்டியா டுருடோ அரசாங்கத்தில் இருந்து நிதியமைச்சராக விலகினார்.

59 வயதான கார்னி கனடா, இங்கிலாந்து ஆகிய இரு மத்திய வங்கிகளின் ஆளுநராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவராவார். இதன் மூலம் டிரம்புடன் வணிகப் போரில் ஈடுபடுவதற்குப் பொருத்தமானவராக கார்னி கருதப்படுகிறார்.

லிபரல் கட்சியின் 400,000 உறுப்பினர்கள் தங்களின் அடுத்த தலைவரை இன்று கனடிய நேரப்படி மாலையில் தேர்ந்தெடுப்பர்.

2015-ஆம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராக 9 ஆண்டுகளுக்கு பதவி வகித்த டுருடோ தனது 43-வது வயதில் பிரதமரானார்.