டொரண்டோ – கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அந்நாட்டில் கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்த கன்சர்வேடிவ் கட்சியை தோற்கடித்து, லிபரல் கட்சி ஆட்சியமைக்கவுள்ளதாக அந்நாட்டின் பிரபல பத்திரிக்கைகள் ஆரூடங்களைக் கூறி வருகின்றன.
மாற்றத்தை எதிர்பார்த்த கனட நாட்டு மக்கள் லிபரல் கட்சியைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நாளை அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளிவரவுள்ள நிலையில், லிபரல் கட்சி பெரும்பான்மையில் வெற்றி பெற்று, ஜஸ்டின் ட்ருதா புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தற்போதைய நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் லிபரல் கட்சி 183 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலை வகிக்கிறது . கன்சர்வேடிவ் கட்சி 99 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இடது சாரியான என்டி பி கட்சி 44 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
மொத்தமுள்ள 338 தொகுதிகளில் ஆட்சி அமைக்க பெரும்பான்மையாக 170 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்தத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் ஈழத் தமிழர்கள் 6 பேர் போட்டியிட்டனர். இதில் ஸ்காபரோ ரூஜ் பார்க் என்ற தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி என்ற வேட்பாளர் 7,780 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.