மலாக்கா: கடந்த ஆண்டு நவம்பரில் விடுதலைப் புலிகள் குழுவுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் இரண்டு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிறுவன அதிகாரி ஆகியோரின் பிணை விண்ணப்பத்தை இங்குள்ள அமர்வு நீதிமன்றம் இன்று புதன்கிழமை நிராகரித்தது.
நீதிபதி எலிசபெத் பாயா வான் தனது தீர்ப்பில் காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன் (34), சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் (60) மற்றும் எஸ்.சந்துரு (38) ஆகியோர் மீதான வழக்கில் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டதால் அவர்களின் பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் ஏன் பிணை வழங்கப்பட வேண்டும் என்பதற்கான எந்தவொரு சிறப்பு சூழ்நிலையிலும் வழக்கறிஞர்கள் நிரூபிக்கத் தவறிவிட்டதாக எலிசபெத் கூறினார்.
இந்த வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடுமுன், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் பிணை மனுவை சமர்ப்பிக்க நீதிபதி எலிசபெத் நேற்று செவ்வாய்க்கிழமை அனுமதித்தார்.
பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சொஸ்மா) பிரிவு 13 அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் சாமிநாதன் ஜாமீனுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி கடந்த நவம்பர் 29-ஆம் தேதியன்று தீர்ப்பளித்திருந்தார்.