Home நாடு காடெக் தொகுதியில் மஇகா – ஜசெக உள்ளிட்ட 6 முனைப் போட்டி

காடெக் தொகுதியில் மஇகா – ஜசெக உள்ளிட்ட 6 முனைப் போட்டி

669
0
SHARE
Ad

மலாக்கா : இன்று நடைபெற்ற மலாக்கா மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலில் அரசியல் பார்வையாளர்களால் ஆர்வத்துடன் பார்க்கப்படும் தொகுதி காடெக். அலோர்காஜா நாடாளுமன்றத்தின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

இங்கு மஇகா-தேசிய முன்னணி சார்பில் வி.பி.சண்முகம் போட்டியிடுகிறார். கடந்த 2018 பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியை மஇகாவின் வேட்பாளர் பி.பன்னீர் செல்வத்தைத் தோற்கடித்துக் கைப்பற்றிய ஜி.சாமிநாதன் மீண்டும் ஜசெக-பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

பெர்சாத்து கட்சியின் சார்பில் தேசியக் கூட்டணி வேட்பாளராக முகமட் அமிர் பித்ரி முஹாராம் காடெக் தொகுதியில் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

இந்த 3 கூட்டணிகளைத் தவிர்த்து மேலும் மூவர் இந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

சுயேச்சைகளாக இருவர் போட்டியிடுகின்றனர். அசாஃபென் என்ற மலாய்க்கார வேட்பாளரும், மோகன் என்ற இந்திய வேட்பாளரும் காடெக் தொகுதியில் சுயேச்சைகளாகப் போட்டியிடுகின்றன.

இவர்களைத் தவிர்த்து லைலா நோரிண்டா பிந்தி மவுன் என்ற பெண்மணி புத்ரா கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றார். புத்ரா கட்சிக்கு அம்னோவின் முன்னாள் பிரமுகர் இப்ராகிம் அலி தலைமையேற்றுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் இங்கு பாஸ் கட்சி போட்டியிட்டபோது 1,865 வாக்குகளைப் பெற்றது. இந்த மலாய் வாக்குகளின் பிளவினால்தான் ஜசெக இந்தத் தொகுதியை சாமிநாதன் மூலம் கைப்பற்ற முடிந்தது.

இப்போதும் பெர்சாத்து-பாஸ் இணைந்த கூட்டணி எத்தனை மலாய் வாக்குகளைப் பிரிக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே இந்தத் தொகுதியில் வெற்றியடையப் போவது தேசிய முன்னணியா பக்காத்தான் கூட்டணியா என்பது தெரியவரும்.

மேலும் சுயேச்சை மலாய் வேட்பாளரும், புத்ரா கட்சி வேட்பாளரும் எந்த அளவுக்கு வாக்குகளை – குறிப்பாக மலாய் வாக்குகளை – பெறப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து தேசிய முன்னணி அல்லது பக்காத்தான் ஹாரப்பானின் வெற்றி-தோல்வி நிர்ணயிக்கப்படும்.

ஆக இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை யார் வெற்றி பெற்றாலும் அவர் இந்தியராகத்தான் இருப்பார் என எதிர்பார்க்கலாம்.

60 விழுக்காடு மலாய் வாக்காளர், 24 விழுக்காடு சீனர்கள். 16 விழுக்காடு இந்தியர்கள் இந்தத் தொகுதியில் இருக்கின்றனர். மலாய் வாக்குகள் மூன்றாகப் பிரியும் என்பதால், சீன, இந்திய வாக்குகள்தான் வெற்றியாளரை நிர்ணயிக்கும் என்ற சுவாரசியமான சூழ்நிலையும் இந்தத் தொகுதியில் எழுந்திருக்கிறது.