Home நாடு “தகுதி அடிப்படையில் இனபேதமின்றி கல்வி வாய்ப்பு கொடுங்கள்” – எங்கும் எதிரொலிக்கும் நவீனின் குரல்

“தகுதி அடிப்படையில் இனபேதமின்றி கல்வி வாய்ப்பு கொடுங்கள்” – எங்கும் எதிரொலிக்கும் நவீனின் குரல்

275
0
SHARE
Ad

மலாக்கா : பல்லைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவின் போது பட்டம் பெறும் மாணவர்களின் சார்பாக – சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவனை அழைத்து அனைத்து மாணவர்களின் சார்பாக உரையாற்றச் சொல்வது பல்கலைக்கழகங்களில் பொதுவாகப் பின்பற்றப்படும் நடைமுறையாகும்.

அந்த வகையில் மலாக்காவிலுள்ள தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியல் துறையில் (computer science) செயற்கை நுண்ணறிவு பிரிவில் (artificial intelligence) எம்.நவீன் என்ற மாணவனுக்கு சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றதற்காக அரச விருது வழங்கப்பட்டு – அதன் காரணமாக நவீன் படித்த பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சார்பாக ஆற்றிய ஏற்புரையின் உள்ளடக்கங்களும், காணொலியும் தற்போது அனைத்து சமூக ஊடகங்களிலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அது மட்டும் இன்றி இன்றைய தமிழ் நாளிதழ்கள் அனைத்திலும் முதல் பக்க செய்தியாகவும் நவீனின் உரை வெளிவந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றும் கல்வி வாய்ப்பு கிடைக்காத தன் நண்பனின் கதையை உருக்கமுடன் நவீன் கூறியது சமூக ஊடகங்களில் சலசலப்பையும் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.  சிறுபான்மை இனத்தவருக்கும் உரிமைகளும் வாய்ப்புகளும் சரிசமமான அளவில் வழங்கப்பட வேண்டும் என்ற நவீனின் குரலும் சமூக ஊடகங்களின் பக்கங்களில் தற்போது பிரபலமாக எதிரொலித்து வருகின்றது.

அப்துல் கலாம் அறிவுரையை
தமிழில் மேற்கோள் காட்டிய நவீன் 

நவீன் தனதுரையில் ஒரு கட்டத்தில் தமிழிலேயே உரையாற்றினார். இந்தியாவின் முன்னாள் அதிபர் அப்துல் கலாமின் அறிவுரையான “நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்ற வாசகத்தை அவர் தமிழிலேயே கூறினார்.

சரி! இது தவிர, அனைவரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு அப்படி என்னதான் கூறினார் நவீன்? அவரின் உரையின் சாராம்சம் இதுதான்:

“எனக்கு மெட்ரிகுலேஷன் வகுப்பில் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது.  ஆனால் என்னைப் போலவே சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றிருந்த என் நண்பன் ஒருவனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.  அந்த முடிவைக் கண்டு அவன் மிகவும் நொந்து போனான். வாழ்க்கையில் தோல்வி அடைந்தவனாக தன்னைக் கருதினான்.  தன் வாழ்க்கையே இத்துடன் முடிந்து விட்டதாக சோகத்துடன் உலவிய அவன் அதிகமாக தனிமையில் இருக்கத் தொடங்கினான். மிகுந்த மன உளைச்சலுக்கும்  ஆளானான்.  மற்றவர்கள் போல் நான் சிறந்தவன் இல்லை என்று எண்ண தொடங்கினான்.

நான் மெட்ரிகுலேஷன் வகுப்பில் நுழைந்தபோது எனக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. எனது நண்பனை விட  குறைந்த அளவில் தேர்ச்சி பெற்றிருந்த பல மாணவர்கள் மெட்ரிகுலேஷன் வாய்ப்பு கிடைத்து அங்கு கல்வியை தொடங்கி இருந்தனர்.

இன்று அந்த நண்பன் இல்லை. ஆனால் அந்த நண்பனுக்கு எனக்கு கிடைத்தது போல அதே வாய்ப்பு கிடைத்திருந்தால் ஒன்று நான் உங்களுக்கு உறுதியுடன் கூறுகின்றேன். இன்று இந்த மேடையில் நான் இருக்கும் இடத்தில் அவன் தான் எனக்கு பதிலாகஉரையாற்றிக் கொண்டிருப்பான்.

இந்த எனது உரை தன்னைப் பற்றியோ சிறுபான்மை சமூகங்களை பற்றியது அல்ல. மாறாக, இனம், மதம் பாராமல் – கல்வி என்பது  சிறந்த முறையில் தகுதி அடிப்படையில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும்.

மெரிட்டோகிராசி என்னும் (meritocracy) தேர்ச்சி தகுதி மூலம் வாய்ப்புகள் வழங்கும் நடைமுறைகள் நமது கல்வி அமைப்பில் கொண்டு வரப்பட வேண்டும். அரசியல் கட்சிகள் கொண்டு வந்த  இன ரீதியான விழுக்காடு ஒதுக்கீடு முறைகள் நம்மிடையே பிளவுகளை ஏற்படுத்தி நம்மை ஒருவரிடம் இருந்து ஒருவர் பிரித்து வைக்கிறது. தகுதி தேர்ச்சி மூலம் வாய்ப்புகளை அனைவருக்கும் சரிசமமாக வழங்குவது தான் ஒற்றுமையான நியாயமான எதிர்கால மலேசியா உருவாவதற்கான ஒரே வழியாகும். நான் சிறந்த முறையில் கல்வித் துறையில் தேர்ச்சி பெற கடும் உழைப்பை வழங்கி அதன் மூலம் சிறுபான்மை சமூகங்களின் குரலாக இன்று உங்கள் முன் நிற்கின்றேன். இந்த சிறுபான்மை சமூகங்களின் குரல் எப்போதுமே அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிறது”

-இதுதான் நவீன் உரையின் முக்கிய சாராம்சம்.

தனது உரையின் செய்தி ஆட்சியில் இருப்பவர்களின் பார்வைக்கு செல்லும் என்று நம்புவதாகவும் நவீன் தெரிவித்துள்ளார்.

அவரின் உரை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கத்தில் பதிவேற்றம் கண்டது. அந்த உரையின் காணொலியின் சில பகுதிகள் பலராலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.