சென்னை : வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் அடுத்து தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்ககூடும். இதன்காரணமாக தமிழ் நாட்டின் பல இடங்களில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
மேலும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.