கான்ஸ் (பிரான்ஸ்) : பிரான்ஸ் நாட்டில் கான்ஸ் நகரில் காவல்நிலையத்தை சேர்ந்த சில போலீசார் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 8) காலை வழக்கமான பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக காரில் ஏறி புறப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அந்த காவல்நிலையத்திற்குள் நுழைந்த நபர் ஒருவன் கத்திக் குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
போலீசார் அமர்ந்திருந்த காரின் கதவை திறந்து, அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தினான்.
கத்திக்குத்துத் தாக்குதலில் அந்த போலீஸ் அதிகாரி படுகாயமடைந்தார். இதனைத் தொடர்ந்து முன் இருக்கையில் இருந்த மற்றொரு போலீஸ் அதிகாரி மீதும் கத்திக்குத்து தாக்குதல் நடத்த அந்த நபர் முயன்றார்.
உடனடியாக துரிதமாக செயல்பட்ட மற்ற போலீஸ்காரர்கள் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டனர். போலீஸ் அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கத்திக் குத்து தாக்குதல் நடத்திய நபர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த போலீஸ் அதிகாரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் யார்? தாக்குதல் நடத்த காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.