Home உலகம் பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: வித்தியாசமான – கோலாகலத் தொடக்க விழா!

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: வித்தியாசமான – கோலாகலத் தொடக்க விழா!

285
0
SHARE
Ad

பாரிஸ்: பாரிஸ் வரலாற்றில் பல நினைவுகூரத்தக்க தருணங்களைக் கடந்த வந்துள்ள உலகப் புகழ் பெற்ற நகரம். நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 26) இன்னொரு காரணத்திற்காக பாரிஸ் வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடித்தது. இந்த முறை ஒலிம்பிக்சை ஏற்று நடத்தும் பாரிஸ் கோலாகலத் தொடக்க விழா சிறப்பாக இருந்தது என்பது மட்டுமல்லாமல் வித்தியாசமாகவும் இருந்தது.

வழக்கமாக, பிரம்மாண்ட அரங்கில் ஒவ்வொரு நாட்டின் விளையாட்டாளர்களும் வரிசையாக தங்களின் நாடுகளின் கொடிகளை ஏந்தி வலம் வருவர். அதற்கு மாறாக, இந்த முறை 85 படகுகளில் 6,800 விளையாட்டு வீரர்கள் செய் நதியில் ஜொலிக்கும் ஈஃபிள் கோபுரத்தை நோக்கி செல்வதும், காற்று நிரப்பப்பட்ட பலூனில் இணைக்கப்பட்ட கலசத்தில் ஒலிம்பிக் ஜோதி வானத்தை நோக்கி உயர்வதும் பிரெஞ்சு தலைநகரம் எளிதில் மறக்க முடியாத காட்சியாக அமைந்தது.

மலேசிய வீரர்களும் இந்த அணிவகுப்பில் இடம் பெற்றனர்.

#TamilSchoolmychoice

பாரிஸ் 2024 திறப்பு விழா இரவில் ஒளிரும் ஒரு விளையாட்டு அரங்கமாக மாறியது. செய் நதியின் பாதையில், கரையோரங்கள் பார்வையாளர் அமரும் இடங்களாகவும், வழியில் உள்ள வரலாற்று சின்னங்கள் கொடிகள், இறகுகள் மற்றும் மழைத்துளிகள் நிறைந்த உற்சாகமான கொண்டாட்டத்திற்கு மௌன சாட்சிகளாகவும் திகழ்ந்தன.

ஒலிம்பிக் விளையாட்டுகளின் வரலாற்றில் முதல் முறையாக விழாவை அதன் பாரம்பரிய மைதான அமைப்பிலிருந்து வெளியே கொண்டு வந்ததன் மூலம், கலை இயக்குனர் தாமஸ் ஜொலி உருவாக்கிய நான்கு மணி நேர கண்கவர் நிகழ்ச்சி அற்புதமான தொடக்கமாக அமைந்தது.

பெய்து கொண்டிருந்த மழையில் விளையாட்டு வீரர்கள் படகுகளின் தளங்களில் குதித்தனர். பார்வையாளர்கள் கரையோரங்களிலும் பாலங்களிலும் வரிசையாக நின்றனர், பாலே நடனக் கலைஞர்கள் கூரைகளில் சுழன்று நடனமாடினர், பாரிஸ் நகரத்து மக்கள் தங்கள் மாடிகளில் வந்து நின்று 205 தேசிய ஒலிம்பிக் குழுக்களின் (NOC) பிரதிநிதிகளை உற்சாகப்படுத்தினர்.

நதி ஊர்வலமும் கலை நிகழ்ச்சிகளும் பாரிசின் மையப்பகுதி வழியாக ட்ரொகடெரோ நோக்கி நகர்ந்தன. அங்குதான் ஒலிம்பிக்ஸ் விழா தொடங்கியது. நேரலையாக இந்த நிகழ்ச்சிகள் உலகம் எங்கும் தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் ஒளிபரப்பாயின.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானின் மந்திர வார்த்தைகளுடன் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடங்கியது: “பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளை திறந்து வைக்கின்றேன்” – என்பதுதான் அந்த மந்திர வார்த்தைகள்.