சென்னை : அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த இந்தியாவுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுடில்லியில் பிரதமர் தலைமையில் நடைபெறும் ‘நிதி ஆயோக்’ என்னும் முதலமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து கண்டனங்கள் எழுந்துள்ளன. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆளும் பாஜகவுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், அவர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தன் கருத்துகளை முன்வைத்தார்.
எனவே, ஸ்டாலினும் இந்த முதலமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தன் கருத்துகளை முன்வைத்திருக்க வேண்டுமென தமிழ் மாநிலக் காங்கிரஸ் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த வேளையில் பாஜக ஆதரவு மாநிலமான பீகாரின் முதல்வர் நிதிஷ்குமாரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.