தஞ்சோங் மாலிம்:மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் தன் அழுத்தமான சுவடுகளை விட்டுச் சென்றவர் அமரர் கவிஞர் சீனி நைனா முகமது. எண்ணற்றப் படைப்புகளை வழங்கி மலேசியத் தமிழ் இலக்கியக் களத்தை செழுமைப்படுத்தியவர். தான் கற்ற கவிதையை எத்தனையோ ஆர்வலர்களுக்கு நாடு முழுவதும் சுற்றித் திரிந்து கற்றுக் கொடுத்தவர். அதன் மூலம் பல கவிஞர்களை தன் வாரிசாக உருவாக்கியவர்.
அவரின் நினைவாக உப்சி (UPSI) என்னும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி 6 இன்று சனிக்கிழமை (ஜூலை 27) சிறப்பாக நடத்தப்பட்டது. டத்தோஸ்ரீ எம்.சரவணன் அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
“கலையும், இலக்கியமும் நம் தமிழினத்தின் ஆணிவேர். அதை என்றும் பயன்படுத்துவதும், பாதுகாப்பதும் நமது கடமை. உப்சி பல்கலைக்கழகத்தின் நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி 6, பரிசளிப்பு விழாவிற்குத் தலைமையேற்றதில் மகிழ்ச்சி. ‘மரபு கவிதையே தமிழ் இலக்கியத்தின் வேர்‘. கவிதையின் நயம் அதன் சொல்லாடலில் உள்ளது. கவிதைகள் ஊற்றெடுக்க நிறையப் படிக்க வேண்டும். நல்ல எழுத்துகள், கருத்துகள் சமுதாயத்தில் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வர முடியும். போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.
பின்குறிப்பு : ‘நல்லார்க்கினியன்’ அமரர் சீனி நைனா முகமது எழுத்தோவியங்களை https://kural.anjal.net/ என்னும் இணைய இணைப்பில் வாசகர்கள் படித்து மகிழலாம். இது தொடர்பான முந்தைய செல்லியல் செய்தி:
இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவு நாள் – அன்னாரின் எழுத்தோவியங்களை இணையம் வழி படிக்கலாம்