Home நாடு இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவு நாள் – அன்னாரின் எழுத்தோவியங்களை இணையம் வழி...

இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவு நாள் – அன்னாரின் எழுத்தோவியங்களை இணையம் வழி படிக்கலாம்

1681
0
SHARE
Ad

இன்று ஆகஸ்ட் 7 – இறையருட் கவிஞர் எனப் போற்றப்பட்டவரும் மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் தனி முத்திரை பதித்தவருமான சீனி நைனா முகம்மது அவர்களின் நினவு நாள். 2014-ஆம் ஆண்டு யாராலும் நிறைவு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை நம்மிடையே ஏற்படுத்தி விட்டு அவர் மறைந்தார். பிரதிபலன் எதிர்பாராது இறைவன் தனக்கு வழங்கிய தமிழ் இலக்கிய அறிவாற்றல் என்னும் அருட்கொடையை மற்றவர்களும் பயன்பெறும் நோக்கில் வாரி வாரி வழங்கியவர் அவர். அதன் காரணமாக எண்ணற்ற இலக்கிய மாணவர்களை – குறிப்பாக இளைய சமுதாயத்தினரை – தன் வாரிசாக நம் நாட்டில் உருவாக்கியவர்.

அவருடன் நெருங்கிப் பழகியவரும் கணினித் துறை நிபுணரும் இணைய – குறுஞ்செயலித் தளங்களில் மொழிகளுக்கான மென்பொருள் – எழுத்துருக்களின் உருவாக்குநருமான – முத்து நெடுமாறன் சீனி நைனா முகம்மது மறைந்தபோது, தன் இரங்கல் செய்தியில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

“மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் தனி முத்திரை பதித்தவரும், மிகச் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவருமான சீனி நைனா முகமது அவர்களின் அகால மறைவு மலேசிய இலக்கிய உலகிற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பு. பல்லாண்டுகளாக அவருடன் நேரடியாகவும், தொலைபேசி உரையாடல்கள் மூலமாகவும் நெருங்கிப் பழகும் அற்புதமான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் தமிழ் மொழியிலும், தமிழ் இலக்கியங்களிலும் அவருக்கிருந்த பற்று, ஆழமான, அதே சமயத்தில் பன்முகங்களைக் கொண்ட அகலமான இலக்கிய அறிவு, தமிழ் மொழியில் அவருக்கிருந்த தெளிவான நோக்கு, சிந்தனை கொண்ட அவரது திறன்கள் என அனைத்தையும் நான் உணர்ந்து பிரமித்திருக்கின்றேன். அவரது திறமைகளையும் அறிவையும் பயன்படுத்தி, செல்லியல் போன்ற தளங்களில் புதிய தொழில் நுட்ப வடிவங்களில் தமிழ் மொழியின் இலக்கியப் பரிமாணங்களைப் பதிவு செய்யும் சில திட்டங்களை வைத்திருந்தேன். அவருடன் இதுபற்றி விவாதித்தும் இருக்கின்றேன். ஆனால் அவையெல்லாம் செயல்வடிவம் பெறும் முன்னரே அவர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டது நமக்கும் நமது மலேசியத் தமிழ் இலக்கிய உலகுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், இஸ்லாம் என பல முனைகளிலும் முத்திரை பதித்த அவர் தனது தமிழ் அறிவை பிறருக்கு ஊட்டி மகிழ்ந்தவர். பல்வேறு வகுப்புகள் நடத்தி யாப்பிலக்கணம், தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம் என போதித்தவர். அவர் மூலம் உலகின் பல பகுதிகளில் உள்ளவர்கள் தங்களின் அறிவை, இலக்கிய ஆற்றலை விரிவாக்கிக் கொண்டனர்”

சீனி நைனா முகம்மதுவுக்கான முத்து நெடுமாறனின் நினைவஞ்சலி பங்களிப்பு

#TamilSchoolmychoice

சீனி நைனா முகம்மதுவின் எழுத்தோவியங்களும், பங்களிப்பும் நிரந்தரமாக பதிவாக்கப்படுவதற்கான முயற்சிகளிலும் இறங்கினார் முத்து நெடுமாறன்.

சீனி நைனா முகம்மது நடத்திய “உங்கள் குரல்” இதழ் வெளிவந்த காலத்தில் மலேசியத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கும் இலக்கண மாணவர்களுக்கும் அவை விருந்தளித்தன. இந்த இதழ்கள் உலகப் பொதுப் பயனீட்டிற்காக மின்பதிவாக்கப் பட்டு இணையத் தளத்தின் வழி இலவசமாக பதிவேற்றம் செய்யும் அரும்பணியை முத்து நெடுமாறன் மேற்கொண்டார். அதற்கான செலவினங்களையும் அவரே ஏற்றுக் கொண்டார். செல்லியல் குழுமமும் இந்தப் பணியில் அவருடன் இணைந்தது.

சீனி நைனா முகம்மதுவின் ‘உங்கள் குரல்’ இதழ்களின் மின்பதிவுகளைக் கொண்ட அந்த இணையத் தளம் “நல்லார்க்கினியர் நற்பதிவுகள்” என்ற தலைப்பில் இயங்குகிறது. சீனி நைனா முகம்மது, ‘நல்லார்க்கினியன்’ என்ற புனைபெயரிலும் எழுதி வந்தார் என்பதால் அந்தப் பெயர் சூட்டப்பட்டது.

அந்த இணையத் தளத்தின் முகவரி :

https://kural.anjal.net/

சீனி நைனா முகம்மது ஐயாவின் இலக்கியப் பணிகள், மின்பதிவுகள் வடிவில் எதிர்கால சந்ததியினருக்கும் பயன்படும் வகையில் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த இணையத் தளம் உருவாக்கப்பட்டது.

உத்தமம் எனும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் மலேசியப் பிரிவும் ஓம்தமிழ் அமைப்பும் இந்தத் திட்டத்தில் இணைந்து தங்களின் ஆதரவை வழங்கினர்.

111 “உங்கள் குரல்” இதழ்கள் 6,660 பக்கங்களாக, 3 வடிவங்களில் மேற்கண்ட இணைப்பில் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. சீனி நைனா முகம்மது ஐயாவின் 18 ஆண்டுகால உழைப்பால் உருவான எழுத்தோவியங்கள் ஒருசேர ஒருங்கிணைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, அவரின் இலக்கியப் பணிகள் எதிர்கால சந்ததியினருக்கும் பயன்படும் வண்ணம் உருவாகியிருக்கிறது இந்த இணையத் தளம்.

பலதரப்பட்ட தமிழ் மொழி மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் இந்த இணையத் தளத்தைப் பயன்படுத்தி பலனடைவார்கள் என நம்புகிறோம்.