Home நாடு செல்லியல் பார்வை: சீனி நைனா முகம்மது: அள்ளக் குறையாமல் வாரி வழங்கிய அமுத சுரபி அறிவுப்...

செல்லியல் பார்வை: சீனி நைனா முகம்மது: அள்ளக் குறையாமல் வாரி வழங்கிய அமுத சுரபி அறிவுப் பெட்டகத்தை இழந்தோம்

1222
0
SHARE
Ad

Seeni Naina Mohdகோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – சில ஆண்டுகளுக்கு முன்னால், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், அமரர் சீனி நைனா முகம்மது அவர்கள் வாரம் தோறும் தலைநகர் முத்தமிழ்ப் படிப்பகத்தில் நடத்திய யாப்பிலக்கணப் பயிற்சி வகுப்பில் நான் கலந்து கொண்ட போதுதான் அவருடன் நேரடிப் பழக்கம் ஏற்பட்டது.

அந்த வகுப்புகளின் மூலம் தமிழ் மொழியில் – தமிழ் இலக்கணங்களில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஞானம், பரந்த விரிவான பார்வை, பல பாடல்களை மனப்பாடமாக அவர் கவிதை நயத்தோடு விவரிக்கும் பாங்கு –

எல்லாவற்றுக்கும் மேலாக, தான் கற்றதையும், கால ஓட்டத்தில் பெற்றதையும் மற்றவர்களுக்கு விளங்கும் வண்ணம் போரடிக்காமல் சரளமாக எடுத்துரைக்கும் – விரித்துரைக்கும் சாகசம் –

#TamilSchoolmychoice

-இப்படியாக அவரது பன்முகத் திறமைகளைக் கண்டு நானும் கலந்து கொண்ட மற்றவர்களும் அப்போது வியந்தது உண்மை.

அவர் ஆங்கில இலக்கியமும் படித்தவர் போன்ற சில பின்னணி உண்மைகளையும் அந்த வகுப்புகளின் மூலம் தெரிந்து கொண்டோம்.

Seeni Naina Funeral 600 x 400

சீனி நைனா முகம்மது அவர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு மரியாதை செலுத்திய பிரமுகர்கள் (இடமிருந்து வலம்) பரகத் குழுமத்தைச் சேர்ந்த பரகத் அலி, ஹாஜி தஸ்லீம், டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு, டத்தோ எம்.சரவணன், டத்தோ தெய்வீகன்…

அவரை விட ஆழமான அறிவு கொண்ட – பரந்த ஞானம் கொண்ட இன்னொருவர் இருக்க வாய்ப்புண்டு.

ஆனால், அவரைப் போல, தான் கற்றதை மற்றவர்களுக்கு தனது கம்பீரக் குரலால், சாரம் குறையாமல், சரளமாக எடுத்துரைக்க வல்ல இன்னொருவர் இன்றைக்கிருக்க வாய்ப்பில்லை.

அதன் பின்னர், மின்னல் வானொலியின் வாயிலாக,‘அமுதே தமிழே’ நிகழ்ச்சிகளில் அவரது தொல்காப்பியத் தொடர் கட்டுரைகளை கேட்கும் பாக்கியம் சில வேளைகளில் கிடைத்தது.

தொல்காப்பியரைப் பற்றியும் அவரது காப்பியம் பற்றியும் பல அறிஞர்கள் பல முனைகளில் எழுதியும் பேசியும் இருந்தாலும், சீனியாரின் காந்தக் குரல் வழி, வார்த்தைகளின் ஜாலத்தில் கேட்கும் போது, தொல்காப்பியன் மீது காதலும் பிறந்தது – கூடவே சீனி நைனா முகம்மதுவின் தமிழின் மீதும்!

Seeni Naina Funeral 3 - 600 x 400

சீனி நைனா முகம்மதுவின் இறுதிச் சடங்குகளில் மரியாதை செலுத்த வந்தவர்களோடு டத்தோ எம்.சரவணன், டத்தோ தெய்வீகன், பினாங்கு வணிகப் பிரமுகர் டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலம், டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு…

பல மேடைகளில் அவரது மடைதிறந்த வெள்ளம் போன்ற உரைகளைக் கேட்டவர்கள் – அழகான தமிழ் நடையில், தனது கம்பீரக் குரலால், பார்வையாளர்கள் நேரம் போவது தெரியாமல் கேட்கும் வண்ணம் உரையாற்றும் திறனும் பெற்றவர் சீனி நைனா முகம்மது என்பதை உணர்ந்திருப்பார்கள்.

மலேசியத் தமிழ் உலகிற்கு அவர் வழங்கிய மிகப் பெரிய பங்களிப்பு, தனது இலக்கிய, இலக்கண, மொழி அறிவாற்றலைத் தனக்குள்ளேயே பூட்டி வைத்து அழகு பார்க்காமல், அதனை மற்றவர்களுக்கு கற்றுத் தந்ததும் – அதன் காரணமாக எண்ணற்ற மாணவர்களை – சீடர்களை உருவாக்கியதும்தான்.

அவர் இன்னும் இருந்திருந்தால், அவரைக் கொண்டு மேலும் பல மாணவர்களை உருவாக்கியிருக்கலாமோ – அவருக்குள் குவிந்து கிடந்த பன்முகத் திறன்களில் மேலும் சிலவற்றை இன்னும் கொஞ்சம் கறந்திருக்கலாமோ என்ற ஏக்கம் ஏராளமானோருக்கு இப்போது வந்திருக்கும் என்பது நிச்சயம்.

என்ன செய்வது! இழந்த பின் ஏங்குவதுதானே மனித இயல்பு!

இஸ்லாமிய உலகிலும் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.

அவர் மறைந்து விட்டாலும், ஆர்வம் குறையாமல், நேரம், காலம், பொருள் கருதாமல் அவர் தன் வாழ்நாளில் வாரி வழங்கியிருக்கும்  தமிழ் படைப்புகளை – மலேசியத் தமிழ் உலகை செழுமைப்படுத்த அவர் எடுத்த முயற்சிகளை –

தனது அறிவாற்றல் தனக்குப் பின்னர் அடுத்த தலைமுறைக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் ஊர் ஊராக வகுப்புகள் நடத்தி தமிழ் ஆர்வலர்களை உருவாக்கிய அவரது தமிழ்ப் பணிகளை –

இந்த வேளையில் நன்றியுடன் நினைவு கூர்வோம்.

மலேசியாவில் தமிழை நீடித்து, நிலைத்திருக்கச் செய்ய உழைத்தவர்களின் –

நமது தாய்மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்ட செல்ல பாடுபட்டவர்களின் –

பட்டியலும் – வரலாறும் எதிர்காலத்தில் உருவாகுமானால், அதில் சீனி நைனா முகம்மதுவின் பெயருக்கும் முக்கிய இடம் இருக்கும்.

அள்ள அள்ளக் குறையாத, அமுத சுரபியாக – அறிவுப் பெட்டகமாகத் திகழ்ந்த அவரது ஆளுமை மிக்க இடம் – இனி என்றும் வெற்றிடமாகவே இருக்கும்.

தமிழ்கூறு நல்லுலகிற்கு, அமரர் சீனி நைனா முகம்மது வழங்கிய பங்களிப்பையும் – பணிகளையும் இந்த வேளையில் ‘செல்லியல்’ குழுமம் நன்றியுடன் நினைவு கூர்ந்து அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகின்றது.

-இரா.முத்தரசன்