Home நாடு “நல்லார்க்கினியர் நற்பதிவுகள்” – சீனி நைனா முகம்மது படைப்புகளின் மேம்பாடும் இணையத் தள இடமாற்றமும்

“நல்லார்க்கினியர் நற்பதிவுகள்” – சீனி நைனா முகம்மது படைப்புகளின் மேம்பாடும் இணையத் தள இடமாற்றமும்

1334
0
SHARE
Ad

  • இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மதுவின் உங்கள் குரல் இதழ்கள் மின்பதிவாக்கம்

நமது நாட்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும், கவிதைத் துறையில் எண்ணற்ற மாணவர்களை, ஆர்வலர்களை உருவாக்கியதிலும் முக்கிய இடம் வகிப்பவர் ஐயா இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது ஆவார்.

அன்னார் நடத்திய “உங்கள் குரல்” இதழ் வெளிவந்த காலத்தில் மலேசியத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கும் இலக்கண மாணவர்களுக்கும் அவை விருந்தளித்தன. இந்த இதழ்கள் உலகப் பொதுப் பயனீட்டிற்காக மின்பதிவாக்கப் பட்டு இணையத் தளத்தின் வழி இலவசமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

தற்போது அந்த இணையத் தளம் மேம்படுத்தப்பட்டு, புதிய இணைய முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மின்பதிவாக்கப்பட்ட “உங்கள்குரல்” இதழ்கள் அனைத்தும் அனைவரும் இலவசமாகப் படித்து மகிழும் வண்ணம் “நல்லார்க்கினியர் நற்பதிவுகள்” என்ற தலைப்பில் கீழ்க்காணும் புதிய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

https://kural.anjal.net/

முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் தொழில்நுட்ப வடிவமைப்பாளரான முத்து நெடுமாறன் இதற்கான தொழில்நுட்ப முயற்சிகளை முன்னெடுத்து அதற்கான செலவினங்களையும் ஏற்றுக்  கொண்டார். இந்த மின்பதிப்புகள் நிரந்தரமாகக் கிடைக்கும் வண்ணம், தமது நிறுவனத்தின் அஞ்சல் இணையத் தளத்தில் (https://anjal.net) “நல்லார்க்கினியர் நற்பதிவுகள்” தளத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

இணைய ஊடகமான செல்லியல் இந்தத் திட்டத்தில் இணைந்து பணியாற்றியுள்ளது. சீனி நைனா முகம்மது ஐயாவின் இலக்கியப் பணிகள் மின்பதிவுகள் வடிவில் எதிர்கால சந்ததியினருக்கும் பயன்படும் வகையில் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்ற முயற்சியில் இணைந்து பணியாற்றி, மலேசியத் தமிழ் இலக்கிய உலகுக்கு தங்களாலியன்ற பங்களிப்பை வழங்கியிருக்கும் விதத்தில் செல்லியல் இணைய ஊடகம் பெருமையும் கொள்கிறது.

மேலும் உத்தமம் எனும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் மலேசியப் பிரிவும் ஓம்தமிழ் அமைப்பும் இந்தத் திட்டத்தில் இணைந்து தங்களின் ஆதரவை வழங்கினர்.

111 “உங்கள் குரல்” இதழ்கள் 6660 பக்கங்களாக, 3 வடிவங்களில் மேற்கண்ட இணைப்பில் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. சீனி நைனா முகம்மது ஐயாவில் 18 ஆண்டுகால உழைப்பால் உருவான எழுத்தோவியங்கள் ஒருநேர ஒருங்கிணைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, அவரின் இலக்கியப் பணிகள் எதிர்கால சந்ததியினருக்கும் பயன்படும் வண்ணம் இந்த இணையத் தளம் உருவாக்கப்பட்டது.

நவீனத் தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய இணையத் தள சூழலில், பக்கங்களை விரைவாகவும் பாதுகாப்பான முறையிலும் படித்து மகிழும் வண்ணம் நல்லார்க்கினியர் நற்பதிவுகள் தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மாணவர்கள், ஆர்வலர்கள் அனைவரும் இந்த இணையத் தளத்தைப் பயன்படுத்தி பலனடைவார்கள் என நம்புகிறோம்.