கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் தனி முத்திரை பதித்தவரும், மிகச் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவருமான சீனி நைனா முகமது அவர்களின் அகால மறைவு மலேசிய இலக்கிய உலகிற்கும், தனிப்பட்ட முறையில் தனக்கும் பேரிழப்பு என அன்னாரின் மறைவு குறித்து செல்லியல் தொழில் நுட்ப ஆலோசகரும், செல்லினம், செல்லியல் தளங்களின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் தனது இரங்கலில் தெரிவித்தார்.
இன்று பினாங்கைச் சேர்ந்த பிரபல கவிஞரும், தமிழ் இலக்கியப் படைப்பாளருமான சீனி நைனா முகம்மதுவின் மறைவு குறித்து தனது இரங்கலைப் பதிவு செய்த முத்து நெடுமாறன், அன்னாருடனான தனது அனுபவங்களை செல்லியல் தகவல் ஊடகத்திடம் பகிர்ந்து கொண்டார்.
“பல்லாண்டுகளாக அவருடன் நேரடியாகவும், தொலைபேசி உரையாடல்கள் மூலமாகவும் நெருங்கிப் பழகும் அற்புதமான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் தமிழ் மொழியிலும், தமிழ் இலக்கியங்களிலும் அவருக்கிருந்த பற்று, ஆழமான, அதே சமயத்தில் பன்முகங்களைக் கொண்ட அகலமான இலக்கிய அறிவு, தமிழ் மொழியில் அவருக்கிருந்த தெளிவான நோக்கு, சிந்தனை கொண்ட அவரது திறன்கள் என அனைத்தையும் நான் உணர்ந்து பிரமித்திருக்கின்றேன்” என்றும் முத்து நெடுமாறன் மேலும் கூறினார்.
“அவரது திறமைகளையும் அறிவையும் பயன்படுத்தி, செல்லியல் போன்ற தளங்களில் புதிய தொழில் நுட்ப வடிவங்களில் தமிழ் மொழியின் இலக்கியப் பரிமாணங்களைப் பதிவு செய்யும் சில திட்டங்களை வைத்திருந்தேன். அவருடன் இதுபற்றி விவாதித்தும் இருக்கின்றேன். ஆனால் அவையெல்லாம் செயல்வடிவம் பெறும் முன்னரே அவர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டது நமக்கும் நமது மலேசியத் தமிழ் இலக்கிய உலகுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு” என முத்து நெடுமாறன், சீனி நைனா முகம்மதுடனான தனது நட்பு அனுபவங்களைப் பற்றி கூறும் போது பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், இஸ்லாம் என பல முனைகளிலும் முத்திரை பதித்த அவர் தனது தமிழ் அறிவை பிறருக்கு ஊட்டி மகிழ்ந்தவர். பல்வேறு வகுப்புகள் நடத்தி யாப்பிலக்கணம், தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம் என போதித்தவர். அவர் மூலம் உலகின் பல பகுதிகளில் உள்ளவர்கள் தங்களின் அறிவை, இலக்கிய ஆற்றலை விரிவாக்கிக் கொண்டனர்” என்றும் முத்து நெடுமாறன் தனது இரங்கல் உரையில் சீனி நைனா முகம்மதுவுக்கு புகழாரம் சூட்டினார்.