Home நாடு பினாங்கு மஇகா தலைவர் கருப்பண்ணனை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் – டத்தோ ஹென்ரி...

பினாங்கு மஇகா தலைவர் கருப்பண்ணனை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் – டத்தோ ஹென்ரி கோரிக்கை

614
0
SHARE
Ad

Henry Penang 300 x200பட்டவொர்த், ஆகஸ்ட் 7 –  எதிர்க்கட்சிகளின் தீவிர ஆதரவாளரும், கடந்த பொதுத் தேர்தல் சமயத்தில் தேசிய முன்னணிக்கு எதிராக தீவிரமாக இயங்கியவருமான ஓம்ஸ் தியாகராஜனை வைத்து விருந்து நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்து, அதற்கு பினாங்கில் உள்ள மஇகா கிளைத் தலைவர்களையும் கைத்தொலைபேசி எஸ்எம்எஸ் மூலமும் அழைப்புகள் விடுத்த பினாங்கு மஇகா தொடர்புக் குழுத் தலைவர் எம்.கருப்பண்ணன் மீது ம.இ.கா தலைமையகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை பினாங்கு மாநில மஇகா தொடர்புக் குழு பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், பினாங்கு மாநில மஇகா தொடர்புக் குழுவின் பொருளாளருமான டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் இன்று கோரிக்கை விடுத்தார்.

பினாங்கு மாநிலம் தற்போது எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் இருப்பதால், எதிர்க்கட்சி ஆதரவாளராக மாறியிருக்கும் கருப்பண்ணன் இனியும் பினாங்கு மாநில மஇகா தொடர்புக் குழுத் தலைவர் பதவியில் நீடிப்பது பொருத்தமாக இருக்காது, என்றும் அதனால் கருப்பண்ணனை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஹென்ரி வலியுறுத்தினார்.

பத்திரிக்கைகளுக்கு வெளியிட்ட அறிக்கையில், மஇகா புக்கிட் பெண்டரா தொகுதி தலைவருமான கருப்பண்ணன், தேசிய முன்னணிக்கும், மஇகாவுக்கும் எதிராக மேற்கொண்ட இந்த கீழறுப்பு செயலுக்கு தனது கடும் கண்டனங்களையும், மஇகா பாகான் தொகுதி தலைவருமான டத்தோ ஹென்ரி தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

ஓம்ஸ் தியாகராஜன் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை

அதே வேளையில் இந்த பிரச்சனையைக் கிளப்புவதால், ஓம்ஸ் தியாகராஜன் மீது தனக்கு எந்தவித தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்றும், எதிர்க்கட்சிகளை ஆதரிக்கும் அவரது நிலைப்பாட்டை தான் ஜனநாயக ரீதியில் மதிப்பதாகவும் டத்தோ ஹென்ரி கூறினார்.

ஆனால், கட்சிக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள், மறைமுகமாக எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் மஇகாவினர் யாராக இருந்தாலும் – அது ஒரு மாநிலத் தலைவராக இருந்தாலும் – அவர் மீது ஒழங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் மஇகாவை நேசிப்பவன் என்ற முறையில் எனது நிலைப்பாடு என்றும் ஹென்ரி வலியுறுத்தினார்.

MIC-Logo-Slider“இதே கருப்பண்ணன் கடந்த பொதுத் தேர்தலில் எங்களின் பாகான் தொகுதியில் உள்ள பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி-மஇகா வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது அவருக்காக, அவரது வெற்றிக்காக நாங்கள் எல்லாம் கட்சிக் கட்டுப்பாடு கருதி கடுமையாக உழைத்தோம். ஆனால் அந்த சமயத்தில் இதே ஓம்ஸ் தியாகராஜன் எதிர்க்கட்சிகளுக்காக பகிரங்கமாக வேலை செய்தார். இன்றுவரைக்கும் எதிர்க்கட்சி ஆதரவாளராகவும், அன்வார் இப்ராகிமிற்கு நெருக்கமானவராகவும், பிகேஆர் கட்சியுடன் நெருக்கமான தொடர்புடையவராக ஓம்ஸ் தியாகராஜன் விளங்குகின்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்போது அவரை வைத்து, மஇகா தலைவர்களைக் கூப்பிட்டு விருந்து ஏற்பாடுகள் செய்யும் கருப்பண்ணன் மீது ஏன் மஇகா தலைமையகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? ஒழுங்கு நடவடிக்கைக்குழு ஏன் இன்னமும் இதைப் பற்றி பாராமுகமாக இருக்கின்றது?” என்றும் டத்தோ ஹென்ரி கேள்வி எழுப்பினார்.

பினாங்கு மாநில மஇகா விருந்து

கடந்த 4 ஆகஸ்ட் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருந்து நிகழ்ச்சி ஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் ம.இ.கா கிளைத் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கருப்பண்ணன் தலைமையில் இயங்கும் பினாங்கு மாநில மஇகாவே முன்னின்று கிளைத் தலைவர்களின் கைத்தொலைபேசிகளுக்கு கடந்த  ஆகஸ்ட் 3ஆம் தேதி குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) அனுப்பியிருக்கின்றது.

“அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் நமது கட்சியின் தேசியத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் இரண்டு துணையமைச்சர்கள், மற்றும் மத்திய செயலவை உறுப்பினர்கள், மூத்த உறுப்பினர்கள் இப்படியாக மஇகா தலைவர்கள் இத்தனை பேர் இருக்க – இவர்களையெல்லாம் அழைத்து நிகழ்ச்சி படைக்காமல் –  எதிர்க்கட்சி ஆதரவாளர் ஓம்ஸ் தியாகராஜனை வைத்து கருப்பண்ணன் நடத்துவதன் நோக்கம் என்ன? ” என்றும் ஹென்ரி கடுமையாக சாடினார்.

கருப்பண்ணனின் இந்த நடவடிக்கைக்கு தாசேக் குளுகோர் தொகுதி காங்கிரஸ் தலைவரும், மாநில தகவல் பிரிவு தலைவருமான பி.எஸ்.மணியமும் உடந்தையாக இருந்திருக்கின்றார் என்பதால் அவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த இருவரின் செயல்களுக்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட அடுத்த ம.இ.கா மத்திய செயலவைக் கூட்டத்தில் தான் முன்மொழியப் போவதாகவும்,அதே வேளையில் கருப்பண்ணனை பினாங்கு மாநில மஇகா தொடர்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ம.இ.கா தலைமையகம் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் டத்தோ ஹென்ரி தனது பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.