கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு மஇகாவின் மத்திய செயலவை கூடி சில முக்கிய முடிவுகள் எடுக்கும் என்ற ஆரூடங்கள் நிலவும் நிலயில், மற்றொரு பரபரப்பும் மஇகாவைப் பற்றிக் கொண்டுள்ளது.
கட்சியில் மீண்டும் இணைந்த டத்தோ சோதிநாதன், டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன், டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் ஆகிய மூவரும் மஇகா மத்திய செயலவை உறுப்பினர்களாக தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தால் இன்று நியமிக்கப்படுவார்கள் எனக் கூறப்படும் வேளையில், பாலாவும், ஹென்ரியும் (படம்) கட்சியில் சேர்வது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக எதுவுமே சொல்லாததுதான் மஇகா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய மத்திய செயலவைக் கூட்டத்திற்கு அந்த மூவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால், பாலாவும், ஹென்ரியும் கலந்து கொள்வது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
எனவே, இறுதி நேரத்தில் மனம் மாறி இவர்கள் இருவரும் இணைந்து இன்றைய மத்திய செயலவைக் கூட்டத்தில் கலந்து கொள்வார்களா அல்லது பின்னொரு நாளில் கட்சியில் இணைய உத்தேசித்துள்ளார்களா அல்லது கட்சிக்கு திரும்புவதற்கு விரும்பவில்லையா என்பது போன்ற குழப்பங்களுக்கு, இன்றைய மத்திய செயலவை முடியும்போது ஓரளவுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏன் இந்தக் குழப்பம்?
டத்தோ சோதிநாதன் (படம்) கடந்த ஆண்டில் மீண்டும் மஇகாவில் இணைந்தபோது அவருடன் சுமார் 600-க்கும் மேற்பட்ட கிளைகளும் கட்சிக்குள் மீண்டும் இணைந்தன. ஆனால் அந்த சமயத்தில் ஏனோ சில கருத்து வேறுபாடுகளால் பாலாவும், ஹென்ரியும் இணையவில்லை.
ஆனால், இணைப்பு விழாவில் அப்போது உரையாற்றிய சோதிநாதன், பாலாவும்,ஹென்ரியும் மீண்டும் மஇகாவில் இணைவார்கள் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இன்றுவரை அந்த இணைப்பு நடைபெறவில்லை.
திரைமறைவில், மஇகா தலைமைத்துவம் பாலா, ஹென்ரி இருவருடனும் பல பேச்சுவார்த்தைகள் நடத்தியிருப்பதாகவும், இருப்பினும் சில கருத்து வேறுபாடுகள், பதவி நியமனங்கள் ஆகியவை தொடர்பில் இன்னும் இறுதியான முடிவுகள் எடுக்கப்பட முடியவில்லை என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய மத்திய செயலவைக் கூட்டத்தில் சோதிநாதன், பாலகிருஷ்ணன், ஹென்ரி மூவரும் தேசியத் தலைவரால் மத்திய செயலவை உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற ஆரூடமும் நிலவுகின்றது.
இதற்கிடையில், நேற்று சனிக்கிழமை, நடப்பு மத்திய செயலவை நியமன உறுப்பினர் டத்தோ சுந்தர் சுப்ரமணியத்துடன் (படம்) செல்லியல் நடத்திய செல்பேசி பேட்டியில் மத்திய செயலவை உறுப்பினர்களாக அந்த மூவரும் நியமிக்கப்படுவதை வரவேற்பதாகவும், அத்தகைய நியமனங்களில் இடையூறுகள் ஏதும் இருப்பின் தனது நியமன மத்திய செயலவை உறுப்பினர் பதவியை விட்டுத் தரத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், பாலாவும், ஹென்ரியும் தங்களுக்கு வழங்கப்படும் மத்திய செயலவை நியமன உறுப்பினர் பதவிகளை ஏற்றுக் கொண்டு கட்சிக்குத் திரும்புவார்களா அல்லது, கட்சிக்கு வெளியில் இருந்து கொண்டே தங்களின் அரசியல் பங்கெடுப்பைத் தொடர்வார்களா என்பது இன்று மாலை மஇகா மத்திய செயலவை நிறைவடையும்போது தெரிந்து விடும்.
-செல்லியல் தொகுப்பு