Home Featured நாடு தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்துடன் தேவமணி சந்திப்பு

தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்துடன் தேவமணி சந்திப்பு

746
0
SHARE
Ad

devamany-panneer selvam-feature-சென்னை – தமிழகத்திற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருந்த மஇகாவின் தேசியத் துணைத் தலைவரும் பிரதமர் துறையின் துணை அமைச்சருமான செனட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி நேற்று வெள்ளிக்கிழமை சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.

முன்னதாக, தனது வருகையின் ஒரு பகுதியாக கடந்த வியாழக்கிழமை பிப்ரவரி 2-ஆம் தேதி சென்னையிலுள்ள, மலேசியத் துணைத் தூதரக அலுவலகத்திற்கு வருகை தந்த தேவமணி அங்கு துணைத் தூதர் அகமட் பாஜரசாம் அப்துல் ஜலில் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். 

பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து, தேவமணி பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.

#TamilSchoolmychoice

நேற்று பிற்பகலில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் நடத்தப்பட்ட சந்திப்பில் தமிழகம் மற்றும் மலேசிய அரசாங்கங்களுடனான இணைந்த நல்லுறவுகள் தொடர்பில் பல்வேறு விவகாரங்களை தேவமணி விவாதித்தார்.

devamany-panneer selvam

தமிழக முதல்வருக்கு நினைவுப் பரிசு வழங்கும் தேவமணி…

இந்த சந்திப்புக்குப் பின்னர் தமிழக முதல்வரின் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்திற்கு வருகை தந்திருக்கும் பிரதமர் துறையின் துணையமைச்சர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியை தமிழக முதல்வர் சந்தித்தார் எனவும் அந்தச் சந்திப்பின்போது மலேசியாவின் நடப்பு விவகாரங்கள் குறித்து தேவமணி முதல்வருக்கு விரிவாக விளக்கம் அளித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தலைமையிலான மலேசிய அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக எடுத்து வரும் முயற்சிகள் குறித்து தேவமணி எனக்கு விளக்கம் அளித்தார். குறிப்பாக தமிழ் மொழியின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக 720 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை மலேசிய அரசாங்கம் வழங்கியுள்ளது என்ற செய்தி என்னை மிகவும் கவர்ந்தது. அதனை ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டேன். மேலும் மலேசிய இந்திய மாணவர்களுக்காக மெட்ரிகுலேஷன் கல்வித் தேர்வுகளுக்காக 1,500 இடங்களை மலேசிய அரசாங்கம் ஒதுக்கி, உறுதிப்படுத்தியுள்ளது என்பதும் என்னை மிகக் கவர்ந்த அம்சமாகும். காரணம், எல்லாவிதமான எதிர்கால வெற்றிகளுக்கும் கல்வி ஒன்றுதான் அடித்தளமாகும்” என தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்ததாகவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவித்தது.

devamany-panneer selvam-meeting officialsதனது குழுவினருடன் முதல்வர் பன்னீர் செல்வத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் தேவமணி…

இந்திய வணிகர்களுக்கு மேலும் வலுவூட்டுவதற்காக மலேசிய அரசாங்கம் 1.2 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பதும், சீட், செடிக் போன்ற அமைப்புகளின் மூலம் இந்திய சமுதாயத்தின் வணிக நலன்கள் கண்காணிக்கப்படுவதும், ஆதரிக்கப்படுவதும், குறிப்பிடத்தக்க மற்றொரு தகவலாகும் என்றும் பன்னீர் செல்வம் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.

“மலேசியாவில் ஏறத்தாழ 2 மில்லியன் இந்தியர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் நலன்களுக்காக, கலாச்சார, அறிவார்ந்த வளர்ச்சிக்காக, பொருளாதார முன்னேற்றங்களுக்காக இதுபோன்ற நடவடிக்கைகள் நிறைய மேற்கொள்ளப்படுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இதன் மூலம் மலேசிய இந்திய சமுதாயத்திற்கு அந்த நாட்டில் சாதகமான, ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையும் ஏற்படுகின்றது” என்றும் பன்னீர் செல்வம் தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

“அந்த நம்பிக்கையோடு சேர்த்துப் பார்க்கும்போது, தமிழக அரசுக்கும், மலேசியாவுக்கும் இடையிலான சிறந்த நல்லுறவும், தொடர்புகளும் எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து மென்மேலும் உயர்வை அடையும் என்றும் நம்புகிறேன்” என்றும் பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.

நேற்று வெள்ளிக்கிழமையுடன் தமிழகத்திற்கான தனது அதிகாரத்துவ வருகையை நிறைவு செய்த தேவமணி இன்று சனிக்கிழமை காலை நாடு திரும்பினார்.