
சென்னை: அதிமுக தலைமையைக் கைப்பற்றும் சட்டப் போராட்டத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் முதல் சட்டப் போராட்ட வெற்றியைப் பெற்றுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அரசாங்க அதிகாரிகளால் வைக்கப்படிருந்த சீலை அகற்றக் கோரி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தலைமை அலுவலகத்தின் சாவியை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல்களால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி, வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்துள்ளார்.
இந்த சீலை அகற்றக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும் உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
நேற்று புதன்கிழமை (ஜூலை 20) விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றவும், தலைமை அலுவலகத்தின் சாவியை உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இபிஎஸ் தரப்பில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. அவரின் இல்லத்தின் முன் குவிந்த அவரது ஆதரவாளர்கள், உற்சாக முழகக்கங்களை எழுப்பினர். முதல் கட்ட சட்டப் போராட்டத்தில் இபிஎஸ் அணிக்குக் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.