Home உலகம் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா நிறைவு – அமெரிக்கா முதலிடம் – சீனா இரண்டாமிடம்!

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா நிறைவு – அமெரிக்கா முதலிடம் – சீனா இரண்டாமிடம்!

193
0
SHARE
Ad
ஒலிம்பிக்ஸ் நிறைவு விழாவில் ஹாலிவுட் நடிகர் டாம் குருஸ்

பாரிஸ்: கடந்த இரண்டு வாரங்களாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில்  கோலாகலமாக நடைபெற்று வந்த ஒலிம்பிக்ஸ் விளையாட்டுத் திருவிழா நேற்று ஆகஸ்ட் 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. கண்கவர் நடனங்கள் பாடல்களுடன் அற்புதமான வாண வேடிக்கைகள், கேளிக்கை நிகழ்ச்சிகள், சாகசங்களுடன் இந்த ஒலிம்பிக்ஸ் நிறைவு விழா சிறப்பாக நடந்தேறியது.

அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ஆம் ஆண்டில் நடைபெறுகிறது. அதற்காக ஒலிம்பிக்ஸ் கொடி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமன்றத் தலைவரிடம் (மேயர்) ஒப்படைக்கப்பட்டது.

நிறைவு நிகழ்ச்சிகளின்போது, திடீரென அரங்கின் உச்சியிலிருந்து கயிற்றின்  வழியாக தனது சினிமாப் படங்களின் பாணியில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் அந்தரத்தில் இருந்து பறந்து வந்து தரையை வந்தடைந்தது ரசிகர்களிடையே பெருத்த கரவொலியை எழுப்பியது. அதைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மன்றத் தலைவர் ஒலிம்பிக்ஸ் கொடியை டாம் குருசிடம் ஒப்படைக்க அதனை ஏந்திக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அரங்கில் இருந்து அவர் வெளியே வந்தார். அங்கிருந்து சாலைகளில் பயணம் செய்து ஒரு விமானத்திற்குள் நுழைந்து அந்த கொடியை ஒப்படைத்தார். அதன் பின் அந்த கொடி விமானத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் வந்தடைவது போல ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்த காணொலிகள் திரையில் கட்டப்பட்டன.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் பதக்கப் பட்டியலில் வழக்கம் போல் அமெரிக்கா 40 தங்கப் பதக்கங்களுடன் முன்னணி வைக்கிறது. சீனாவும் அதே அளவிலான தங்கப் பதக்கங்களை வாரிக் குவித்தது. எனினும் அமெரிக்கா, வெள்ளி, வெண்கல பதக்கங்களை சீனாவை விட அதிக அளவில் வென்றதால் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பெற்றது.

இரண்டாம் இடத்தை சீனா பெற்ற நிலையில் மூன்றாவது இடத்தை ஜப்பான் 20 தங்கப் பதக்கங்களுடன் கைப்பற்றியது. நான்காவது நிலையில் ஆஸ்திரேலியா 18 தங்கப் பதக்கங்களை கைப்பற்றிய நிலையில் உபசரணை நாடான பிரான்ஸ்  ஐந்தாவது இடத்தில் பதினாறு தங்கப்பதக்கங்களுடன் இடம்பெற்றது.