Home உலகம் ஒலிம்பிக்ஸ் : பெர்லி டான்- எம்.தீனா இணை தோல்வி கண்டாலும் குவியும் பாராட்டுகள்!!

ஒலிம்பிக்ஸ் : பெர்லி டான்- எம்.தீனா இணை தோல்வி கண்டாலும் குவியும் பாராட்டுகள்!!

471
0
SHARE
Ad

பாரிஸ் : ஒலிம்பிக்சிஸ் பூப்பந்து மகளிர் இரட்டையர் போட்டிகளில் கலந்து கொண்டு மலேசியர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றனர் பெர்லி டான் – எம்.தீனா இணையினர். மலேசியாவின் பல இனத் தோற்றத்தை பிரதிபலிக்கும் வண்ணம் சீன-இந்திய சமூகங்களைச் சார்ந்த அவர்கள் ஒற்றுமையுடன் விளையாடி வருவதும் அனைவரையும் கவர்ந்துள்ளது.

நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியிலும் பெர்லி டான் – எம்.தீனா இணை தோல்வி கண்டாலும், பதக்கங்கள் எதனையும் பெறாமல் சோகத்துடன் அவர்கள் ஒலிம்பிக்சில் இருந்து வெளியேறினாலும், அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நேற்றைய ஆட்டத்தில் அவர்கள் 11-21, 11-21 என்ற புள்ளிக் கணக்கில் இரண்டு செட் ஆட்டங்களில் ஜப்பானிய இணையிடம் தோல்வி கண்டனர். அவர்களைத் தோற்கடித்த ஜப்பானின் நாமி மட்சுயாமா – சிஹாரு ஷிடா இணை உலகத் தர வரிசையில் 4-வது இடத்தில் இருப்பவர்களாவர்.

#TamilSchoolmychoice

மலேசியாவின் ஒலிம்பிக்ஸ் தங்கப் பதக்கக் கனவை நோக்கி பூப்பந்து போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெர்லி டான் – எம்.தீனா இணை துரதிர்ஷ்டவசமாக சீனாவின் சென் குயிங் சென் – ஜியா யீ ஃபான் (Chen Qingchen-Jia Yifan) இணையிடம் அரை இறுதி ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினர். சீனாவின் இந்த இரட்டையர் விளையாட்டாளர்கள் உலகத் தர வரிசையில் முதலிடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

ஒலிம்பிக்ஸ் பூப்பந்து விளையாட்டுகளில் பெண்களுக்கான போட்டிகளில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் விளையாட்டாளர்களாக பெர்லி டான் – எம்.தீனா இணை திகழ்கின்றனர். அவர்கள் சந்தித்து விளையாடியவர்கள் எல்லாம் அனுபவமிக்க சிறந்த ஆற்றல் கொண்ட பூப்பந்து விளையாட்டாளர்கள் என்பதால் தோல்வி கண்டாலும் அவர்கள் நடத்திய போராட்டத்திற்காக அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.