Home நாடு பிரசாந்த் குமார் : 66% மலாய் வாக்காளர் தொகுதியில்- 3 முனைப் போட்டியில் வெற்றி பெறுவாரா?

பிரசாந்த் குமார் : 66% மலாய் வாக்காளர் தொகுதியில்- 3 முனைப் போட்டியில் வெற்றி பெறுவாரா?

765
0
SHARE
Ad

மலாக்கா : எதிர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில், ரிம் தொகுதியில் பிகேஆர் சார்பில் பிரசாந்த் குமார் என்ற 27 வயது இளைஞர் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

பெரிக்காத்தான் நேஷனல், தேசிய முன்னணி என இரண்டு கூட்டணிகளும் போட்டியிடுவதால், ரிம் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

ஜாசின் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் சட்டமன்றத் தொகுதி ரிம்.

#TamilSchoolmychoice

பிகேஆர் போட்டியிடும் 11 தொகுதிகளில் இந்த முறை இந்த ரிம் தொகுதி இந்தியருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அம்னோவின் சார்பில் தேசிய முன்னணி வேட்பாளராக டத்தோ கைதிரா அபு சாஹார் இங்கு போட்டியிடுகிறார்.

பெர்சாத்து சார்பில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக அசாலினா அப்துல் ரஹ்மான் போட்டியிடுகிறார்.

66 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களைக் கொண்ட ரிம் தொகுதியில் பிகேஆர் சார்பில் இந்தியர் ஒருவர் நிறுத்தப்பட்டிருப்பது மாறிவரும் புதிய அரசியல் கலாச்சார மாற்றத்திற்கான சிறந்த அடையாளமாகப் பார்க்கலாம்.

20 விழுக்காட்டு சீனர்கள், 13 விழுக்காட்டு இந்திய வாக்காளர்கள், 1 விழுக்காடு மற்றவர்கள் – என்ற அளவில்  விழுக்காடு ரீதியாக வாக்காளர்களைக் கொண்டிருக்கிறது ரிம்.

இந்தத் தொகுதியில் பிளவுபடும் மலாய் வாக்குகளினால், இந்திய, சீன வாக்காளர்களைக் கொண்டு பிரசாந்த் குமார் வெற்றி பெறக் கூடிய வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.

போட்டியிடுகின்ற இரண்டு வேட்பாளர்களும் மலாய்க்காரர்கள் என்பதால் 13 விழுக்காட்டு இந்தியர்களின் வாக்குகள் அப்படியே மொத்தமாக பிரசாந்த் குமார் வசம் செல்வதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

சீன வாக்காளர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்களின் பெரும்பாலான வாக்குகள் ஜசெக சார்ந்திருக்கும் பக்காத்தான் ஹாரப்பான் பக்கமே செல்லும்.

கடந்த 2018 பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் தேசிய முன்னணி-அம்னோவைச் சேர்ந்த டத்தோ கசாலி அகமட் போட்டியிட்டு 536 வாக்குகள் பெரும்பான்மையில் மட்டுமே வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் பாஸ் கட்சியும் போட்டியிட்டு, 1,262 வாக்குளைப் பெற்றது. இந்த முறை பாஸ் தேசியத் கூட்டணியில் இணைந்திருக்கிறது. இந்தத் தொகுதியில் பெர்சாத்து வேட்பாளர் போட்டியிடுகிறார். எனவே, பாஸ்-பெர்சாத்து இணைந்து எத்தனை வாக்குகளைப் பெறப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து பிரசாந்த் குமாரின் வெற்றி வாய்ப்பும் அமையும்.

மும்முனைப் போட்டிகள் – மலாய் வாக்குகள் பிளவு – ஆகிய காரணங்களால் ரிம் தொகுதியில் பிரசாந்த் குமார் பிரகாசம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கின்றது.