Home கலை உலகம் திரைவிமர்சனம் : “அண்ணாத்தே” – முதல் பாதி கலகலப்பு – மறுபாதி அடிதடி!

திரைவிமர்சனம் : “அண்ணாத்தே” – முதல் பாதி கலகலப்பு – மறுபாதி அடிதடி!

761
0
SHARE
Ad

பெரும் எதிர்பார்ப்புடன் தீபாவளி வெளியீடாக வெளிவந்திருக்கிறது ரஜினிகாந்தின் அண்ணாத்தே!

வரிசையாக வெற்றிப் படங்களை இயக்கி வரும் “சிறுத்தை” சிவா, ஆகக் கடைசியாக இயக்கி வெற்றி வாகை சூடிய அஜித்தின் படம் “விஸ்வாசம்”. சிவாவின் அதற்கடுத்த படைப்பு-ரஜினியும் இணைகிறார் – பிரம்மாண்டப் படங்களைத் தரும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு – என்பதால் அண்ணத்தேக்கான எதிர்பார்ப்பு இரண்டு மடங்கானது.

ஆனால், சிவா கதை, திரைக்கதை அமைப்பில் இரசிகர்களைக் கொஞ்சம் ஏமாற்றிவிட்டார் என்றுதான் கூறவேண்டும். தனது விஸ்வாசம் படத்திலிருந்து கொஞ்சம், வேதாளம் படத்திலிருந்து கொஞ்சம், தங்கை பாசத்தைக் கொண்ட -விஜய் நடித்த – திருப்பாச்சி படத்திலிருந்து கொஞ்சம் – என கதை, சம்பவங்களை உருவி “அண்ணாத்தே” படத்தை உருவாக்கியிருக்கிறார். அதுவும் வெளிப்படையாக சாதாரண இரசிகன் கூட தெரிந்து கொள்ளும் வண்ணம் கையாண்டிருக்கிறார்.

கதை, திரைக்கதை

#TamilSchoolmychoice

படத்தின் முதல் பாதி அப்படியே விஸ்வாசம் படத்தின் முதல் பாதியின் உல்டா. சூரக்கோட்டை கிராமத்தில் காளையன் என்ற பெயரோடு நல்ல விஷயங்களுக்காக அடிதடி காரியங்களில் ஈடுபடுகிறார் ரஜினி. ரஜினியின் பாசம் முழுவதும் தங்கை தங்க மீனாட்சி (கீர்த்தி சுரேஷ்) மீது.

ஊரில் அவரை அண்ணாத்தே என அழைக்கிறார்கள்.

ரஜினி பின்புலம் அறியாமல் அவருடன் மோதுகிறார் பிரகாஷ் ராஜ். இடையில் பிரகாஷ் ராஜூக்கும் ரஜினிக்கும் இடையில் மோதலுக்கு வழிவகுக்கும் வழக்கு ஒன்றுக்காக வழக்கறிஞராக வரும் நயன்தாரா மீது ரஜினிக்கு காதல்.

படித்து முடித்து விட்டு வரும் தங்கைக்காக மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் ஏற்படும் பிரச்சனையில் கீர்த்தி சுரேஷ் ஊரை விட்டே காணாமல் போகிறார். ஏன் அவ்வாறு செய்கிறார் என்பது படத்தின் முக்கிய சஸ்பென்ஸ் அம்சங்களில் ஒன்று.

ஆறு மாதங்கள் கழித்து சில உண்மைகள் தெரியவர கொல்கத்தாவில் இருக்கும் தங்கையைத் தேடிச் செல்கிறார் ரஜினி. அங்கு தங்கை எதிர்நோக்கி இருக்கும், ஏழ்மை, பிரச்சனைகள், ஆகியவற்றை அறிந்து கொள்கிறார் ரஜினி. கொல்கத்தாவில் தனது தங்கையை இந்த நிலைமைக்குத் தள்ளிய பலம் வாய்ந்த வில்லனையும் இறுதியில் அவனுக்குத் துணையாக வரும் இன்னொரு வில்லன் அண்ணனையும் எதிர்த்துப் போராடி அழிக்கத் தயாராகிறார் ரஜினி.

அந்தப் போராட்டத்தில் அவர் எதிர்நோக்கும் சம்பவங்கள் என்ன? அந்தப் போராட்டத்தில் அவர் வெற்றியடைந்தாரா? தங்கை ஏன் அந்த பிரச்சனை நிலைமைக்கு ஆளானார்? தங்கையை மீண்டும் பழையபடி ரஜினி வாழவைத்தாரா? என்பதை படத்தின் இரண்டாவது பாதி  விவரிக்கிறது.

படத்தின் பலம் – முதல் பாதி

படத்திற்கு பலம் சேர்ப்பதும் இரசிக்க வைப்பதும் முதல் பாதியில் வரும் கிராமத்து, ரகளைகள்-சம்பவங்கள்தான்! அதிலும் அத்தை மகள், மாமன் மகளாக வரும் குஷ்பு-மீனா காட்சிகள் இரசிக்க வைக்கின்றன.

இருந்தாலும் குஷ்பு-மீனாவின் கணவர்களாக வரும் பாண்டியராஜன், லிவிங்க்ஸ்டன் இருவரையும் அவ்வளவு கேவலமாகக் காட்டியிருக்க வேண்டியதில்லை.

அதிலும், கணவரை விவாகரத்து செய்து விட்டு உங்களைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என ரஜினியிடம் மீனா சொல்வதும், கணவரை உலக்கையால் தாக்கிக் கொன்று விட்டு அத்தை மகனான ரஜினியை மறுமணம் செய்து கொள்வதாக குஷ்பு சொல்வதும், நகைச்சுவைக்காக என்றாலும் தமிழ்க்குலப் பெண்களுக்கே இழுக்கான வசனங்கள்.

முதல் பாதி, கிராமத்துப் பின்னணி என்றாலும், படம் முழுக்க பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கிறார்கள். திருவிழா, கல்யாண வீட்டுக் காட்சிகள், பாடல் காட்சிகள், ஊர்வலங்கள் என அனைத்திலும் திரளான மக்கள்-நடிகர் கூட்டம்.

போதாதற்கு தமிழ்த் திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் பலரையும் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

நகைச்சுவையில் ரஜினிக்கு துணையாக “பச்சைக்கிளி” என்ற கதாபாத்திரத்தில் வருகிறார் சூரி. கீர்த்தி சுரேஷூக்கு முறை மாப்பிள்ளைகளாக வரும் சதீஷ், சத்யாவின் அலம்பல்களும் சிரிப்பலைகளை ஏற்படுத்துகின்றன.

படத்தின் முக்கிய பலத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்தான் ரஜினிகாந்த். 70 வயதைத் தாண்டிய – அடுத்தடுத்து உடல் நலம் குன்றிய நிலையிலும் – திரையில் அவை எதுவுமே தெரியாத வண்ணம் பின்னி எடுத்திருக்கிறார். பாடல் காட்சிகளிலும், நடையிலும் காட்டும் சுறுசுறுப்பு, சண்டைக்காட்சிகளில் காட்டும் தீவிரம், தங்கை மீது காட்டும் பாசம், அடிக்கடி ‘பஞ்ச்’ வசனங்கள் உதிர்க்கும் கம்பீரம், நயன்தாராவுடனான காதலில் காட்டும் துள்ளல் இப்படி எதிலுமே தன் பங்குக்கு, தன் இரசிகர்களுக்கு குறை வைக்கவில்லை ரஜினி.

அண்மையப் படங்களில் ரஜினி அதிகம் அழுது நடித்தது “அண்ணாத்தே” படமாகத்தான் இருக்கும்.

படத்திற்கு இன்னொரு பலம் தங்கையாக வரும் கீர்த்தி சுரேஷின் திறமையான நடிப்பு. முதல் பாதியில் அழகாக, உற்சாகத்தோடு வலம் வருபவர் – இரண்டாவது பாதியில் சாதாரண சேலையில், அழுது புலம்பும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

நயன்தாராவுக்கு அதிக வேலையில்லை.

டி.இமான் இசை படத்திற்குப் பலம் என்றாலும் முதல் பாதியில் வரும் பாடல்கள் மனதில் பதியவில்லை. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய கடைசிப் பாடலான “அண்ணாத்தே” பாடல் மட்டும் தனித்து நிற்கிறது.

ஒளிப்பதிவும் சிறப்பாக அமைந்திருக்கிறது.

படத்தின் பலவீனம்-குறைகள்

முதலில் குறிப்பிட்டபடி, படத்தின் கதை-திரைக்கதை அடுத்து என்ன நடக்கும் என நாம் எளிதாக ஊகிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இரண்டாவது பாதியில் இடையிடையே வரும் பாடல் காட்சிகள் படத்தின் விறுவிறுப்பைக் குறைக்கின்றன.

வில்லன்களுக்கு அரசியல்வாதிகளும் காவல் துறையும், அரசாங்க அமைப்பும் உதவுகின்றன எனக் காட்டியிருப்பதால், காட்சிகளை மேற்கு வங்காள மாநிலத் தலைநகர் கொல்கத்தாவிற்கும் இடம் மாற்றியிருக்கிறார்கள். சன் டிவி தயாரிப்பு என்பதாலோ?

அவ்வளவு பிரம்மாண்ட கட்டமைப்பைக் கொண்ட வில்லன்கள் உலகத்தை, ஊருக்குப் புதுசான ரஜினி தனி ஆளாக வீழ்த்துவது ஹீரோயிசமாகப் படுகிறதே தவிர மனதில் ஒட்டவில்லை.

அதே போல, அவ்வளவு பாசமாக அண்ணனிடம் இருந்து விட்டு, கல்யாணத்துக்கு முதல் நாள் வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடும் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத் தன்மை நம்பும்படியாகவோ, நியாயமாகவோ படவில்லை.

ரஜினியின் பெரியாத்தா 6 மாதங்களுக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் சொன்ன உண்மையை ரஜினியிடம் கூறுவதும், ஏன் அப்படி காலம் கடத்தினார் என்பதிலும் நம்பும்படியான கதையம்சம் இல்லை.

கொல்கத்தாவில் அவ்வளவு சிரமங்களுக்கு இடையிலும் கீர்த்தி சுரேஷ் அண்ணனிடம் உதவி கேட்காதது ஏன்? ரஜினி முகத்தைக் காட்டாமல் தங்கைக்கு உதவுவது ஏன் என்பது போன்ற கதாபாத்திர அமைப்புகளிலும், திரைக்கதையிலும் நிறைய ஓட்டைகள்.

என்னதான் விமர்சன ரீதியில் இப்படி சில குறைகள், பலவீனங்கள் படத்திலும் இருந்தாலும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ரஜினி படத்தைப் பார்க்காமல் விடுவதா? அதுவும் தீபாவளிக்கு!

அந்த வகையில் தனது இரசிகர்களுக்கு என எந்தக் குறையும் வைக்காமல் தனக்கே உரிய கொண்டாட்டமான தீபாவளி விருந்து படைத்திருக்கிறார் “அண்ணாத்தே” ரஜினி!

-இரா.முத்தரசன்