Home நாடு மலாக்கா : தேசிய முன்னணி முதலமைச்சர் வேட்பாளர் சுலைமான் முகமட் அலி

மலாக்கா : தேசிய முன்னணி முதலமைச்சர் வேட்பாளர் சுலைமான் முகமட் அலி

488
0
SHARE
Ad

மலாக்கா : எதிர்வரும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், மாநில முதலமைச்சராக சுலைமான் முகமட் அலி மீண்டும் நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டபோது, சுலைமான் முகமட் அலி முதலமைச்சராக செயல்பட்டவராவார்.

தேசிய முன்னணி வெற்றி பெற்றால், அம்னோவின் சார்பில் யார் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது

#TamilSchoolmychoice

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றால் தேசிய முன்னணி சார்பாக சுலைமான் முகமட் அலியே முதலமைச்சராகப் பதவியேற்பார் எனவும் அந்த அறிவிப்பு மேலும் தெரிவித்தது. மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கும் தேசிய முன்னணி தயாராக இருப்பதை மேற்கண்ட அறிவிப்பு சுட்டிக் காட்டுகிறது.

தேசிய முன்னணி எதிர்வரும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் தனித்தே களம் காண்கிறது. இதன் மூலம் மும்முனைப் போட்டிகள் 28 தொகுதிகளிலும்  நடைபெறும் என கணிக்கப்படுகிறது.

இறுதி நிலவரம் வேட்புமனுத் தாக்கல் நாளான நாளை திங்கட்கிழமை (நவம்பர் 8) தெரிய வரும்.

பக்காத்தான் முதலமைச்சர் வேட்பாளர் – அட்லி சஹாரி

இதற்கிடையில, பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியும் தங்களின் சார்பாக முதலமைச்சர் வேட்பாளராக அட்லி சஹாரியை முன்னிறுத்தியுள்ளனர்.

2018 பொதுத் தேர்தலில் மலாக்காவை பக்காத்தான் கைப்பற்றியதைத் தொடர்ந்து அட்லி சஹாரி முதலமைச்சரானார். சிறந்த ஆட்சி நிர்வாகத்தை அவர் வழங்கி வந்திருந்தாலும், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மீண்டும் மலாக்காவைக் கைப்பற்றியதால் அவரின் ஆட்சி கவிழ்ந்தது.

முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காத பெரிக்காத்தான்

இதுவரையில் முதலமைச்சர் வேட்பாளராக யாரையும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மட்டும் அறிவிக்கவில்லை.

காடெக் தொகுதியில் ஜசெக-மஇகா வேட்பாளர்கள் மோதல்

தேசிய முன்னணி, மஇகாவுக்கு வழக்கம்போல் ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளது. ஜசெக வேட்பாளர் ஜி.சாமிநாதன் போட்டியிடும் அதே காடெக் தொகுதியை மீண்டும் மஇகாவுக்கு தேசிய முன்னணி ஒதுக்கியுள்ளது.

மஇகா வேட்பாளராக வி.பி.சண்முகம் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

அண்மைய சில ஆண்டுகளாக காடெக் தொகுதியின் மஇகா ஒருங்கிணைப்பாளராகவும் சண்முகம் பணியாற்றி வந்தார்.

4 இந்தியர்கள் மலாக்கா சட்டமன்றங்களுக்குப் போட்டி

மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் இதுவரையில் நான்கு இந்தியர்கள் முக்கியக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

காடெக் தொகுதியைக் கைப்பற்ற ஜசெக-மஇகா சார்பில் இரண்டு இந்தியர்கள் – ஜி.சாமிநாதன், வி.பி.சண்முகம் – மோதுகின்றனர்.

பக்காத்தான் கூட்டணி சார்பில் – பிகேஆர் கட்சி சார்பில் – ரிம் சட்டமன்றத் தொகுதியில் பிரசாந்த் குமார் பிரகாசம் போட்டியிடுகிறார். 11 தொகுதிகளில் போட்டியிடும் பிகேஆர் முதன் முறையாக இந்தியர் வேட்பாளர் ஒருவரை நிறுத்துகிறது.

கெராக்கான் கட்சியின் சார்பில், பெரிக்காத்தான் கூட்டணி வேட்பாளராக அசாஹான் சட்டமன்றத் தொகுதியில் தினேஷ் பாசில் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.