Home நாடு சாமிநாதன் காடெக் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டி

சாமிநாதன் காடெக் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டி

636
0
SHARE
Ad

மலாக்கா : நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில், ஜசெகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 8 தொகுதிகளில் ஒன்றான காடெக் சட்டமன்றத் தொகுதியில் நடப்பு சட்டமன்ற உறுப்பினரான ஜி.சாமிநாதன் மீண்டும் போட்டியிடுகிறார்.

ஜசெக கட்சி போட்டியிடும் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் சாமிநாதன் பெயரும் இடம் பெற்றிருக்கிறது.

கடந்த 2018 பொதுத் தேர்தலில் ஜசெக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட புதுமுகமான சாமிநாதன் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் காடெக் தொகுதியில் மஇகா வேட்பாளர் பி.பன்னீர் செல்வத்தை 307 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து மலாக்கா சட்டமன்றத்தில் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஆட்சி அமைத்தபோது, ஆட்சிக் குழுவிலும் இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்து சாமிநாதன் இடம் பெற்றார். மலாக்கா சட்டமன்ற உறுப்பினர்களில் பக்காத்தான் சார்பில் வெற்றி பெற்ற ஒரே இந்திய வேட்பாளராக சாமிநாதன் திகழ்ந்தார்.

காடெக் தொகுதியில் மீண்டும் வெற்றி வாகை சூட முடியுமா?

மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் இந்த முறை மும்முனைப் போட்டிகள் நடைபெறும் என்பது ஏறத்தாழ உறுதியாகவிட்டது.

கடந்த முறை பாஸ், காடெக் தொகுதியில் போட்டியிட்டு 1,865 வாக்குகளைப் பெற்றது. மஇகாவின் சார்பில் போட்டியிட்ட பி.பன்னீர் செல்வம் 4,085 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இந்த முறை மும்முனைப் போட்டியில் காடெக் தொகுதியில் தேசிய முன்னணி-மஇகா சார்பில் பன்னீர் செல்வம் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடராஜா செல்லப்பா, காடெக் தொகுதிக்கான நடப்பு மஇகா ஒருங்கிணைப்பாளரான சண்முகம், அலோர்காஜா மஇகா தொகுதி தலைவர் ராஜன் ஆகியோரும் மஇகா வேட்பாளராகப் பரிசீலிக்கப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசிய முன்னணி வேட்பாளர்கள் நாளை சனிக்கிழமை இயங்கலை வழி அறிவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.