கோலாலம்பூர்: மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபுவை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல் துறை அதிகாரி சிருல் அசார் உமார் மீண்டும் நாட்டிற்குள் திரும்ப கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை காவல் துறை ஆலோசித்து வருகிறது.
காவல் துறை தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ ரசாருடின் ஹுசைன், சிருல் அசார் ஆஸ்திரேலிய குடியேற்ற தடுப்பு மையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
அவர் நாடு திரும்புவதற்கான வாய்ப்பை ஆராய்வதற்காக சட்டத் துறை அலுவலுகம் (அட்டர்னி ஜெனரல்) நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புகளின் ஒத்துழைப்பும் ஆராயப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் விடுதலையான சிருல் அசாருடன் தொடர்பு கொள்ள காவல் துறை அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் ஐஜிபி சுட்டிக் காட்டினார்.
2015 ஆம் ஆண்டு முதல் ஒன்பது வருடங்கள் காவலில் இருந்த சிருல் அசார் சனிக்கிழமை நவம்பர் 11-ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள வில்லாவுட் குடிநுழைவு (இமிகிரேஷன்) தடுப்பு மையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
சொந்த நாடுகளுக்கு நாடு கடத்த முடியாத, ஆஸ்திரேலியக் குடிமகன் அல்லாத கைதிகளை குடியேற்ற அதிகாரிகளால் காலவரையின்றி வைத்திருக்க முடியாது என்று நவம்பர் 8 அன்று நாட்டின் உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து சிருல் விடுதலையானார்.
2006 ஆம் ஆண்டு அல்தான்துயாவை கொலை செய்ததற்காக சிருல் அசார் மற்றொரு காவல் துறை அதிகாரி அசிலா ஹட்ரி ஆகிய இருவரும் 2009-ஆம் ஆண்டில் மரண தண்டனை பெற்றனர்.
குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அவர்களை விடுதலை செய்து மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கூட்டரசு பெடரல் நீதிமன்றம் பின்னர் அவர்களுக்கான தண்டனையை மீண்டும் உறுதி செய்தது.
மீண்டும் கைது செய்யப்படுவதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்றார் சிருல் அசார். சமீபத்திய உயர் நீதிமன்றத் தீர்ப்பு அவரை விடுவிக்கும் வரை, ஆஸ்திரேலிய குடிநுழைவுத் துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.