
கான்பெரா: நேற்று சனிக்கிழமை (மே 3) நடைபெற்ற ஆஸ்திரேலியா பொதுத் தேர்தலில் நடப்பு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் 2-வது தவணைக்கு வெற்றி பெற்றிருக்கிறார். அவரின் தலைமையிலான தொழிலாளர் கட்சி வெற்றி வாகை சூடியிருக்கிறது.
கனடா பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றிருப்பதைப் போன்று ஆஸ்திரேலியாவின் தொழிலாளர் கட்சியும் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் இரண்டாவது தவணைக்கு வெற்றி பெறும் முதல் ஆஸ்திரேலியப் பிரதமராக அல்பானிஸ் திகழ்கிறார்.
150 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 85 தொகுதிகளை ஆளும் தொழிலாளர் கட்சி வெற்றி கொண்டது. எதிர்க்கட்சியான லிபரல் கட்சி 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
கடந்த 18 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 6 பிரதமர்களை மாறி மாறிக் கண்டுள்ளது.
எதிர்க்கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் பீட்டர் டட்டன் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வி கண்டார்.