சென்னை : பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி ஹைதராபாத் மருத்துவமனையில் 82-வது வயதில் காலமானார். சில தமிழ்ப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக எம்ஜிஆர் நடித்த நாளை நமதே படத்தில் ‘நானொரு மேடைப் பாடகன்’ பாடலுக்கு எம்ஜிஆரின் தம்பியாக ஆடிப் பாடி நடித்திருப்பார்.
nஅவரின் மறைவுக்கு நடிகர் கமலஹாசன் உருக்கமான இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் கமல் கூறியதாவது:
“தெலுங்கு சினிமாவில் கோலோச்சிய மூத்த நடிகரும், எனது ஆத்ம நண்பருமான சந்திரமோகன் விடைபெற்றுக்கொண்டார்.
அவருக்கும் எனக்குமான பந்தம் தொடங்கியது என் 16வது வயதில். சந்திரமோகனுக்கு நடனம் பயிற்றுவிக்கும்படி தங்கப்பன் மாஸ்டர் என்னைப் பணித்தார். சந்திரமோகனின் தமிழில் தெலுங்கு வாடை சற்று தூக்கலாக இருக்குமென்பதால் அவர் கதாநாயகனாக நடித்த படத்திற்கு என்னையே தமிழில் டப்பிங் பேசும்படி பணித்தது ஏவிஎம் நிறுவனம். அதுவரை டான்ஸ் அஸிஸ்டெண்டாக இருந்த எனக்கு அது ஒரு புதிய வாய்ப்பாக அமைந்தது.
இப்படித் தொடங்கிய எங்கள் பயணத்தில், தமிழில் பெருவெற்றி பெற்ற 16 வயதினிலே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் என் கதாபாத்திரத்தை சந்திரமோகன் ஏற்றார்.
எங்கள் இருவருக்குமான பொதுவான ஆர்வங்களில் முதன்மையானது சாப்பாடு. தேடித்தேடி ரசித்து ரசித்து உண்பதில் மகா சமர்த்தர். அதை விட வாழும் கலை அறிந்த நிபுணர். தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் சூத்திரம் அவருக்குத் தெரியும்.
அபாரமான நடிகர், எப்போதும் கற்றுக்கொள்ளத் தயாராக இருந்த மாணவர், என் இனிய நண்பர் நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார். இத்தருணத்தில் அவரது நினைவுகள் என்னைச் சூழ்ந்து நிற்கின்றன. சென்று வாருங்கள் என் ஆப்தரே!”