கோலாலம்பூர் – நாளுக்கு நாள் மலேசியத் திரைப்படங்களின் தரம் உயர்ந்து, அவை அனைத்துலக அளவில் உயரிய அங்கீகாரங்களைப் பெற்று வரும் நிலையில், மலேசியாவிலும் அப்படிப்பட்ட படங்களுக்கு சிறந்த ஒரு அங்கீகாரம் வழங்கும் நோக்கில், ‘மலேசிய இந்திய சினிமா விருது 2016’ என்ற மிகப் பிரம்மாண்டமான விருது விழா இவ்வாண்டின் இறுதியில் நடைபெறவுள்ளது.
கடந்த 2015-ல் வெளிவந்த ‘இரவன்’, ‘வேற வழி இல்ல’, ‘கிட்’, ‘அகிலேஸ்வரி’, ‘பின்னோக்கம்’, ‘அவனா நீ’, ‘மறவன்’, ‘முத்துக்குமார் வாண்டட்’, ‘நட்சத்திரா’ ஆகிய படங்களோடு, திரையரங்குகள் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் வெளிவந்த குறும்படங்களும் இந்த விருது விழாவில் போட்டியிடவுள்ளன.
அதோடு, வானொலி, தொலைக்காட்சிப் படைப்பாளர்களின் சிறந்த பங்களிப்பு ஆகியவற்றையும் சேர்த்து மொத்தம் 36 விருதுகள், மிகா 2016 விருது விழாவில் வழங்கப்படவுள்ளன.
இந்த விருது விழாவை, மிகா அவார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், ‘ரவ்லேசியா’ முத்து மாளிகை ஆதரவுடன் மிகப் பெரிய அளவில் நடத்தவுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு அண்மையில், தலைநகர் ‘பார்க் ரோயல்’ தங்கும் விடுதியில் நடைபெற்றது.
இச்சந்திப்பில், டத்தோ கமில், சுகன் பஞ்சாட்சரம் மற்றும் நாட்டின் முன்னணிக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
“கடந்த 10 ஆண்டுகளாக, மலேசிய இந்திய சினிமா ஒரு துரித வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. ‘ஆண்டாள்’ தொடங்கி ஆகக் கடைசியாக வந்த ‘மயங்காதே’ வரை பல்வேறு நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் நமது திரையரங்குகளை அலங்கரித்து வருகின்றன. அதில் ‘வெட்டிப் பசங்க’, ‘மறவன்’, ‘ஜகாட்’ போன்ற படங்கள் உலக அங்கீகாரத்தைப் பெற்ற படங்களாக மலேசிய இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளன. ஆக, விருது வழங்க சரியான தருணம் இது எனும் அடிப்படையில் ‘மிகா 2016’ உருவெடுத்துள்ளது.” என்று அச்சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும், மலேசிய இந்திய சினிமா விருது பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தோற்றுநர் மற்றும் இந்த விருது விழாவின் தலைமை நிர்வாக இயக்குநர் ஆர்.ஜி.நாயுடு பேசுகையில், “நமது திரைப்படக் கலைஞர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் அரும்பாடுபட்டு ஒவ்வொரு படியாக முன்னேறி வரும் இவ்வேளையில், அவர்களுக்கு அங்கீகாரம் முக்கியம் என்பதை நாங்கள் உணர்கிறோம். அதுவும் தரமான பிரமாண்ட விருது விழாவாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்” என்று தெரிவித்தார்.
‘ரவ்லேசியா’, முத்து மாளிகையின் இயக்குநர் வின்னி சின் மிகா 2016 பற்றி கூறுகையில், “மிகா 2016 விருது விழாவில் நாங்களும் ஓர் அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறோம். மலேசிய இந்தியக் கலைஞர்களில் ஒரு சிலர் எங்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகம். அவர்களுக்கு மலேசியர்கள் மத்தியில் இருக்கும் பிரபலத்தை நாங்களும் அறிவோம். அதனால் தான் இந்த விருது விழாவிற்கு எங்களின் பங்காக 70,000 ரிங்கிட் மதிப்புள்ள முத்து ஆபரணங்களைத் தேர்ந்தெடுக்கப்படும் சில விருதுகளுக்கு வழங்கவிருக்கின்றோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மலேசிய இந்திய சினிமா விருது காலத்திற்கேற்ப வரவேற்கத்தக்க ஒன்று” என்று கூறினார்.
நீதிபதிகள்
மிகா 2016 விருது விழாவில் வழங்கப்படவுள்ள 36 விருதுகளை, மலேசியா, இந்தியா, ஸ்ரீலங்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வரும் நீதிபதிகள் கொண்ட குழுவினர் தேர்ந்தெடுப்பார்கள் என்றும், மிகப் பிரபலமான விருதுகள் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 7-க்குள் விண்ணப்பங்கள்
கடந்த 2015-ல் வெளியான திரைப்படங்களின் விண்ணப்பப் பாரங்கள் கிடைக்கப்பெற்று விட்ட நிலையில், 2015-ல் திரையரங்குகளில் அல்லது யூடியூப்பில் வெளியான குறும்படங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.
அதற்கான விண்ணப்பத்தை மிகா 2016-ன் வலைத்தளத்திலிருந்து பெற்று அங்கு பதிவு செய்யலாம். எதிர்வரும் அக்டோபர் 7, 2016- க்குள் விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, படத்தின் டிவிடி நகலுடன், அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த மேல் விவரங்களை www.micaawards.com என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இதனிடையே, மலேசியத் திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சார்ந்த பல்வேறு இயக்கங்கள் தங்களது எழுத்துப்பூர்வமான ஆதரவை மிகா 2016 விருது விழாவிற்கு வழங்கவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வியக்கங்கள் குறித்த முழு விவரங்களையும் மிகா வலைத்தளத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
படங்கள்: (Manimala Krishnan, MICA)