சென்னை, மார்ச்.20- ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்க வேண்டும், இலங்கை போர்க்குற்றம் குறித்த தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டுவர வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகான ஒட்டெடுப்பு நடத்த வேண்டுமென தமிழகம் முழுவதும் மாணவர்கள், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினி ரசிகர்களும் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். வேலூர் மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் நேற்று ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
வேலூர் மாவட்ட பொருளாளர் சோளிங்கர் என்.ரவி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கேசவன், முருகன், ஆட்டோ சேகர், சாரதி, தினேஷ், தங்கதுரை, வடிவேலு, கணேஷ் உள்பட 300க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதத்துக்கு அரசியல் கட்சி பிரமுகர்களும் ஆதரவு தெரிவித்தனர். அ.தி.மு.க. பேச்சாளர் மணி, தி.மு.க. மாவட்ட துணை தலைவர் அசோகன், விடுதலை சிறுத்தைகள் சுகுமார், உதவும் உள்ளங்கள் சிவக்குமார் ஆகியோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகே மாவட்ட தலைவர் நசுருதீன் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இலங்கை பிரச்சினையில் ரஜினி ரசிகர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் போராட்டம் வலுவடைந்துள்ளது.