Home கலை உலகம் “சமர்” – திரைப்பட விமர்சனம்

“சமர்” – திரைப்பட விமர்சனம்

1494
0
SHARE
Ad

Samar-Posterஜன.15  – ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் இணைந்த இயக்குநர் திருவும், விஷாலும் இரண்டாவது முறையாக ‘சமர்’ படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள். ‘சமர்’ என்றால் போர்க்களம் என்று அர்த்தமாம்.

ஊட்டியில் காடுகளை சுற்றிக் காட்டும் வேலை செய்யும் விஷாலுக்கும், சுனைனாவுக்கும் லவ். காட்டிலும், காட்டில் உள்ள மரங்கள் மீதும் கவனம் செலுத்தும் விஷால், அதை விட சிறிது கவனத்தைக் காதலியான தனது மீது காட்டவில்லையே என்று ஆதங்கப்படும் சுனைனா, ஒரு கட்டத்தில் என்னுடைய செருப்பு சைஸ் என்ன? ஹிப் சைஸ் என்ன? என்று கேட்க, அதற்கு பதில் தெரியாமல் விஷால் முழிக்கிறார். இது வேலைக்காகாது என்று யோசிக்கும் சுனைனா, நாம் பிரிந்துவிடலாம், என்று கூறி பேங்காக் சென்று விடுகிறார்.

மூன்று மாதங்கள் கழித்து தன்னால் உன்னை மறக்க முடியவில்லை. நீ உடனே பேங்காக் கிளம்பி வா என்று விஷாலுக்கு கடிதம் எழுதும் சுனைனா, விமானா டிக்கெட்டையும் அனுப்பி வைக்கிறார். சுனைனாவை பார்ப்பதற்காக பேங்காக் போகும் விஷால், அங்கு சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் படம். இதை இயக்குநர் வித்தியாசமான கதையம்சத்தோடும், சஸ்பென்ஸுமாகவும் சொல்லியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

முதல் படத்தில் காதல் கதையோடு களம் இறங்கிய இயக்குநர் திரு, சமர் படத்தின் மூலம் சண்டை,  சஸ்பென்ஸ் கதையோடு களம் இறங்கியிருக்கிறார். தனது முதல் படத்தை காட்டிலும், இரண்டாவது படத்தில் முற்றிலும் வேறுபாட்டை காண்பித்திருக்கும் திரு, கதையையும் ரொம்பவே வித்தியாசமாக யோசித்திருக்கிறார். ஆனால், அதை சொன்ன விதத்தில் தான் சிறிது கோட்டை விட்டிருக்கிறார்.

விஷால், சுனைனாவை தேடி பேங்காக் பயணித்ததுமே சூடு பிடிக்கும் படம் அப்படியே ரசிகர்களை குழப்பம் அடையவும் செய்கிறது. விஷால் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நினைத்து தலையைப் பிச்சிக்கும் அதே நேரத்தில், படம் பார்க்கும் ரசிகர்களும் விஷாலின் நிலைக்குதான் தள்ளப்படுகிறார்கள். இதை மட்டும் தவிர்த்திருந்தால் இயக்குநர் திருவுக்கு கால்ஷீட் கொடுக்க முன்னணி நடிகர்கள் வரிசை கட்டி நின்றிருப்பார்கள்.

காட்டை சுற்றிக் காட்டும் வழிகாட்டி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு உண்டான எந்த விஷயத்தையும் விஷால் செய்யவில்லை. எப்போதும் போல சண்டைக்காட்சிகளிலும், நடனத்திலும் அசத்தியிருக்கும் விஷால், பேங்காக்கில் நடக்கும் காட்சிகளில் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் புலம்பும் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.

விஷாலுடன் லேட்டாக ஜோடி சேர்ந்தாலும், ரொம்பவே ஹாட்டாக ஜோடி சேர்ந்திருக்கும் திரிஷா, எப்போதும் போல பளபளப்பான அழகியாக காட்சியளிக்கிறார்.

தனது முந்தையப் படங்களை காட்டிலும் இதில் கூடுதலான அழகோடு காட்சியளிக்கும் சுனைனா, என்ன தான் பென்ஸ் கார் வைத்திருந்தாலும், காதலன் ஒரு பரிசாக எதையாவது தனக்கு வாங்கிக்கொடுக்க மாட்டானா! என்று ஏங்கும் பல கோடி பெண்களின் மனதை ரொம்ப அழகாக பிரதிபலிக்கிறார்.

ஜெயப்பிரகாஷ், ஜான் விஜய், சம்பத் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் “அழகோ அழகு…” பாடல் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது.  மற்ற பாடல்கள் சுமார் ரகம் தான். படத்திற்கு பின்னணி இசை தருண். ரொம்பவே வித்தியாசமான சவுண்ட்களை கொடுத்திருக்கும் தருண், பின்னணி இசையில் முன்னணிக்கு வர ரொம்பவே முயற்சித்திருக்கிறார். அதற்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது.

ரிச்சட் ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம் என்று சொல்லலாம். ஊட்டியையும், பேங்காக்கையும் தனது கேமராவின் மூலம் பிரமாண்டமாக காண்பித்திருக்கிறார். படத்தில் இடம்பெற்ற நடிகர்களின் முகங்களுக்கு கூடுதல் ஜொலிப்பை கொடுத்திருக்கும் ரிச்சர்டின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள் என படம் முழுவதும் ஜொலிக்கிறது. ஒன்று, இரண்டு இடங்களில் ராமகிருஷ்ணனின் வசனம் தெரிகிறது.

“சிகிச்சை வெற்றி,   ஆனால், நோயாளி மரணம் அடைந்துவிட்டார்” என்பது போலத்தான் சமர் படத்தின் நிலையும். ரொம்பவே வித்தியாசமான கரு. ஆனால், அதற்கு திரைக்கதை அமைத்து படமாக்கிய விதம் தான் ரொம்ப சாதாரணமாக இருக்கிறது.

விஷாலுக்கு பேங்காக்கில் நடைபெறும் சம்பவத்தால் படம் எதிர்ப்பார்ப்பும் விறுவிறுப்பும் அடையும் நேரத்தில், ஒரு குழப்பமான சூழ்நிலையும் உருவாகிறது. இந்த சூழ்நிலையில் விஷால் மட்டும் குழம்பியிருந்தால் பரவாயில்லை, படம் பார்க்கும் ரசிகர்களும் குழப்படைகிறார்கள். விஷாக்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு காரணமான வில்லன்களை விஷால் நெருங்க முடியாது என்பதை மிக அழுத்தமாக ஜான் விஜய் கதாபாத்திரத்தின் மூலம் காட்டியிருக்கும் இயக்குநர், அதே சமயம் படம் முடியும் தருவாயில் அவர்களை விஷால் நெருங்குவதை ரொம்பவே சாதரணமாக காண்பித்திருப்பதால் ரசிகர்களிடம் இருந்த ஆவல் புஸ்ஸாகி விடுகிறது.

இருப்பினும், விஷாலுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு என்ன காரணம் என்று தெரியும் போது, அடங்கேப்பா இப்படியும் மனிதர்கள் உலகத்தில் இருப்பார்களா? என்று ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கும் இயக்குநர் திரு, வித்தியாசமான கதையை யோசித்தது போல சில காட்சிகளையும் வித்தியாசமாக யோசித்திருந்தால் சமர் பெரிய அளவில் சாதித்திருப்பான்.