Home Featured கலையுலகம் அமரர் பாலமுரளி கிருஷ்ணா – சில தகவல்கள்! சாதனைகள்!

அமரர் பாலமுரளி கிருஷ்ணா – சில தகவல்கள்! சாதனைகள்!

678
0
SHARE
Ad

balamurali-krishna

சென்னை – கர்நாடக இசைத் துறையிலும், சினிமா உலகிலும் மிகப் பெரிய ஆளுமையாகத் திகழ்ந்தவர் பாலமுரளி கிருஷ்ணா. ஈடு செய்ய முடியாத மிகப் பெரிய இழப்பாக அவரது மறைவு கருதப்படுகின்றது.

அவரைப் பற்றிய சில தகவல்கள், அவர் நிகழ்த்திய சில சாதனைகள்:

  • இளவயதிலேயே இசை ஞானமும், அறிவும் கொண்டவராகத் திகழ்ந்த பாலமுரளி கிருஷ்ணா முறையாகப் பள்ளி சென்று படிக்காதவர். எனினும் இசைத் துறையில் மேதையாகப் பரிணமித்தார்.
  • பள்ளி சென்று முறையான கல்வி பெறாத அவருக்குப் பின்னாளில் பல பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தன.
  • இதுவரை 25,000 மேடைக் கச்சேரிகள் செய்திருக்கின்றார். இது ஓர் உலக சாதனையாகக் கருதப்படுகின்றது.
  • இந்திய அரசாங்கத்தின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன், போன்ற விருதுகளைப் பெற்றவர்.balamurali_krishna
  • கே.வி.மகாதேவன் இசையில் திருவிளையாடல் படத்தில் அவர் பாடிய ‘ஒரு நாள் போதுமா, இன்றொரு நாள் போதுமா’ என்ற பாடலும் அதற்கு பாடி நடித்த பாலையாவின் நடிப்பும் தமிழ் சினிமா இரசிகர்களால் காலத்திற்கும் மறக்கப்படாத காட்சிகளாகும்.
  • பின்னர் இளையராஜா இசையில் ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று பாலமுரளி கிருஷ்ணா பாடிய ‘கவிக்குயில்’ பாடலும் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றது.
  • மிக அண்மையில் இவர் புதிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடிய “அன்பாலே அழகாகும் வீடு” என்ற “பசங்க” படத்தின் பாடலும்  தமிழ் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
  • “தங்க ரதம் வந்தது வீதியிலே” பாடலும், பாலமுரளி கிருஷ்ணாவின் தேன் குரலில் தமிழ் இரசிகர்களைக் கவர்ந்த பாடலாகும். ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான “கலைக்கோயில்” படத்தில் இடம் பெற்றது இந்தப் பாடல்.
  • கவிஞர் வைரமுத்து, பாலமுரளி கிருஷ்ணா மறைவு குறித்து விடுத்துள்ள இரங்கல் செய்தியில் ‘தங்கரதம் வந்தது வீதியிலே’ என்ற பாடலைக் கேட்டுத்தான் கர்நாடக சங்கீதத்தின் நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டதாகக் கூறியிருக்கின்றார்.
  • சில புதிய இராகங்களையும் பாலமுரளி கிருஷ்ணா உருவாக்கியுள்ளார்.
  • நடிகர் கமலஹாசன் காலில் அடிபட்டு ஓய்வில் இருந்தபோது பாலமுரளி கிருஷ்ணாவிடம் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டார்.அவரது மறைவுக்கு உடனடியாக இரங்கல் தெரிவித்துள்ளார் கமலஹாசன்.
  • இதுவரை 8 மொழிகளில் பாடியுள்ளார் பாலமுரளி.
  • சொந்தமாக 400 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.
  • ஆந்திராவில் பிறந்தவர், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றாலும் சரளமாக தமிழ் மொழியில் பேசவும் பாடவும் செய்தவர்.
  • பிரான்ஸ் அரசாங்கத்தின் ‘செவாலியர்’ விருதையும் பெற்றவர் இவர்.
  • பாலமுரளி தந்தை ஒரு புல்லாங்குழல் இசைக் கலைஞராவார். அவரது தாயார் வீணை இசைக் கலைஞராவார்.
  • மலேசியாவில் பாலமுரளி கிருஷ்ணா பலமுறை கச்சேரிகள் நடத்தியிருக்கின்றார்.
#TamilSchoolmychoice

balamurali-krishna-rajamani

பாலமுரளி கிருஷ்ணாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் அஸ்ட்ரோ இந்திய நிகழ்ச்சிகளுக்கான தலைவர் டாக்டர் இராஜாமணி….

  • அவரது மறைவு குறித்து தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார், அஸ்ட்ரோவின் இந்திய நிகழ்ச்சிகளுக்கான தலைவர் டாக்டர் இராஜாமணி. பாலமுரளியுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளதாகவும் இராஜாமணி நினைவு கூர்ந்துள்ளார்.

-இரா.முத்தரசன்