கோலாலம்பூர் – சொஸ்மா எனப்படும் சிறப்பு குற்றங்கள் (பாதுகாப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவை விடுதலை செய்வதற்கான சட்டரீதியான போராட்டங்களை அவரது வழக்கறிஞர்கள் தொடக்கியுள்ளனர்.
முதல் கட்டமாக, ஹேபிஸ் கோர்ப்பஸ் எனப்படும் ஆட்கொணர்வு மனு ஒன்றை மரியாவின் வழக்கறிஞர்கள் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
சொஸ்மா சட்டம் மரியா மீது தவறுதலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அவரது வழக்கறிஞரும், சக பெர்சே போராளியுமான அம்பிகா சீனிவாசன், அவர் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்பதை அடிப்படைக் காரணமாக வைத்து ஆட்கொணர்வு மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மரியா கைது செய்யப்பட்டுள்ள முறையும், அவர் காவலில் வைக்கப்பட்டுள்ள முறையும் சட்டத்துக்கு புறம்பானது என்றும் அம்பிகா கூறியுள்ளார்.
சொஸ்மா சட்டத்தின் பிரிவு 4 (5)-இன் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளதால் மரியா விசாரணையின்றி 28 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட முடியும்.
மலேசிய மனித உரிமை மன்றத்தில் தலைவருமான அம்பிகா, இன்று செவ்வாய்க்கிழமை மரியா சின் விடுதலைக்காக ஆட்கொணர்வு மனுவைச் சமர்ப்பிக்க கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வந்தபோது அவருடன் மற்ற வழக்கறிஞர்களும் மரியாவின் மூன்று மகன்களும் உடன் வந்தனர்.