Home நாடு சொஸ்மா கைதிகளின் குடும்பத்தினர் போராட்டத்திற்கு கணபதி ராவ் ஆதரவு

சொஸ்மா கைதிகளின் குடும்பத்தினர் போராட்டத்திற்கு கணபதி ராவ் ஆதரவு

313
0
SHARE
Ad

சுங்கை பூலோ : சுங்கை பூலோ சிறைச் சாலையில் சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்  கைதிகளின் குடும்பத்தினர் இன்று  திங்கட்கிழமை சுங்கை பூலோ சிறைச்சாலையின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கினர். கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் நேரடியாக அந்தப் போராட்டக் களத்திற்கு வருகை தந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கைதிகளின் குடும்பத்தினருக்கு தனது ஆதரவை தெரிவித்துக் கொண்டார்.

ஹிண்ட்ராப் போராட்டவாதியான கணபதி ராவ், ஐஎஸ்ஏ சட்டத்தின் கீழ் 495 நாட்களுக்கு தைப்பிங் கமுந்திங் தடுப்பு முகாமில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டவர் ஆவார். அதன் காரணமாக இதுபோன்ற கைதிகளின் குடும்பத்தினர் படும் வேதனைகளைத் தானும் உணர்வதாக கணபதி ராவ் தெரிவித்தார்.

சொஸ்மா சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த கைதிகளின் பிரச்சனைகளை ஆளும் ஒற்றுமை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கைதிகளின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

6 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் வேளையில், அதுவும் சிலாங்கூர் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல்கள் சூடு பிடித்திருக்கும் வேளையில் சொஸ்மா கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்ற விசாரணைகள் – குற்றச்சாட்டுகள் – இன்றி சொஸ்மா சட்டத்தைப் பயன்படுத்தி – தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பலர் இந்தியர்களாவர். சொஸ்மா சட்டத்தை எதிர்ப்போம் – அகற்றுவோம் – என முழக்கமிட்ட பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி இப்போது ஆட்சிக்கு 6 மாதங்களுக்கு மேலாகியும் சொஸ்மா சட்டத்தை அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மக்கள் மத்தியில் பலத்த கண்டனங்களைத் தோற்றுவித்தது.